மழை நீரை சுத்தப்படுத்தி.. கோவில் குளத்தில் சேகரிப்பு..! புதிய முயற்சி வெற்றி பெறுமா ?

0 2302

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் மழை நீரை சுத்தப்படுத்தி  கோவில் குளங்களில் சேமிப்பதற்காக சென்னை மாநகராட்சி நடைமுறைபடுத்தியுள்ள புதிய முறை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

பருவமழை காலங்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்பது வழக்கமான ஒன்று. வடிகால்கள் அமைக்கப்பட்ட பகுதிகளிலும் கூட கனமழை பெய்யும்போது சில மணி நேரம் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கும்

பிளாஸ்டிக் பயன்பாடு, வடிகால்கள் ஆக்கிரமிப்பு, இடைவெளி இல்லாத நெருக்கமான வீடுகள், நீரை உறிஞ்ச இயலாத வகையில் கான்கிரீட் மற்றும் தார்ச் சாலைகள் அமைப்பு போன்றவையே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த சூழலில் மழை வெள்ள நீரை சேமிப்பதற்கான புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது. 'வெள்ளநீர் ஊடுருவல் வடிகால்' திட்டம் மூலம் ஜெர்மன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் மழை வெள்ளநீரை ஏதேனும் ஒரு நீர்நிலையில் சேமித்து வைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ள நீரை நான்கு லேயர்களாக வடிகட்டி அதனை சுத்திகரித்து பின்னர் மழை நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கம் வழியாக ஓரிடத்தில் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜியோடெக்ஸ்டைல் வடிகட்டிகள் மூலம் கழிவுப் பொருட்கள் வடிகட்டப்படுவதால் மழை நீர் சேமிப்பதற்கு முன்னர் சுத்திகரிக்கப்படுகிறது.

சென்னை வடபழநி முருகன் கோயில் குளம், மயிலாப்பூர் சித்திரக்குளம் இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்தி கோயில் குளத்தில் சேமித்து வைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வழக்கமான கான்கிரீட் பயன்படுத்தி வடிகால்கள் அமைக்கும் பணிகளை விட மிக விரைவாகவும், 30% செலவு குறைவாகவும் இருப்பதாக திட்ட வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலேயே நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்கக்கூடிய சூழலில் இதுபோன்ற திட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் எதிர்பார்ப்பு...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments