படுக்கைக்கு கீழே 15 மணி நேரம் பதுங்கியிருந்த கொலையாளிகள் - கோவை தொழிலதிபர் கொலையில் அதிர்ச்சி பின்னணி!

0 148369

கோவை சிங்காநல்லூர் அருகே தொழிலதிபரைக் கொன்று விட்டு பணம் நகை, கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இன்ஜீனியர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர், கோவை - திருச்சி சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த கிருஷ்ணசாமி (வயது 83 ) என்ற தொழிலதிபர் கடந்த வியாழக்கிழமையன்று கொலை செய்யப்பட்டார். வீட்டிலிருந்த நகைகள், கார் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட்னர். அப்போது, கிருஷ்ணசாமியின் செல்போன் ஜி.பி.எஸ் ஐ டிராக் செய்தபோது, அது காரைக்குடியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரைக்குடி போலீஸார் உதவியுடன் கோவை போலீஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாலையில் கிருஷ்ணசாமி வீட்டில் இருந்து கடத்தப்பட்ட கார் அனாதரவாக நிற்பதைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, காரைக்குடியில் லாட்ஜில் பதுங்கியிருந்த விக்ரம் என்ற இளைஞர் மற்றும் 17 வயது சிறுவனைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் தொழிலதிபர் கிருஷ்ணசாமியைக் கொலை செய்ததை விக்ரம் ஒப்புக் கொண்டார்.

போலீசார் விசாரணையில் விக்ரம் கூறியதாவது, ''மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு சரியான வேலை கிடைக்காமல் கோவையில் கார் டிரைவராகப் பணிபுரிந்தேன். மேலும், பணம் அதிகமாக சம்பாதித்து வசதியாக வாழ ஆசைப்பட்டேன். ஏற்கெனவே ஒரு திருட்டு வழக்கில் சிறையில் இருந்த போது, திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெபமணி ஆண்ட்ரூஸ் என்பவர் பழக்கமானார். இரண்டு பேரும் சேர்ந்து ஆளில்லாத வீடுகளில் தனியாக இருக்கும் நபர்களைக் குறிவைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டோம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனையும் என் திட்டத்துக்கு கூட்டு சேர்த்துக் கொண்டேன். 

கடந்த வியாழக்கிழமையன்று காலை நேரத்தில், கிருஷ்ணசாமி வீட்டிற்குள் புகுந்து பெட்ரூமில் உள்ள கட்டிலுக்கடியில் பதுங்கிக் கொண்டோம். இந்த சமயத்தில் வழக்கம் போல் கிருஷ்ணசாமி வீட்டுக்கு வெளியே செல்வதும் வருவதுமாக இருந்தார். அன்றைய தினம் இரவு 10‌.30 மணியளவில் கிருஷ்ணசாமி படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, படுக்கையின் கீழிருந்து வெளியே வந்த நாங்கள் பீரோவைத் திறந்து நகைகளை எடுக்க முயன்றோம். சத்தம் கேட்கவே கிருஷ்ணசாமி எழுந்து சத்தம் போட்டார். அவரை மிரட்டி கத்தினால் கொன்று விடுவோம் என்று கூறி வீட்டிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்தோம். காருடன் தப்பிச் செல்ல முற்பட்டபோது அவர் சத்தம் போடவே அவரை அரிவாளால் வெட்டினோம். இதில், அவர் இறந்து போனார்” என்று தெரிவித்துள்ளார்.

கொலைக்கு சதித்திட்டம் தீட்டிக் கொடுத்த திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் விசுவாச புரத்தைச் சேர்ந்த அகஸ்தியன் என்பவரது மகன் ஜெபமணி ஆண்ட்ரூஸ் (வயது 24 ) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மூன்று பேரும் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments