நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தீவிர பரிசோதனைகளுக்குப் பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதி

0 1667
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குவதை முன்னிட்டு, தேர்வு மையங்களில் தீவிர சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான  நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று  மதியம் 2 மணிக்கு தொடங்குவதை முன்னிட்டு, தேர்வு மையங்களில் தீவிர சோதனைக்கு பிறகு மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் இத்தேர்வை 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 238 மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதில் அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 8,132 பேரும் அடங்குவர்.

சென்னையில் 45 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் மாணவ மாணவியர் 22,500 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் IIT வளாகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள நீட் தேர்வு மையத்தில்  பாதுகாப்பு பணி தொடர்பாக  சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்  ஆய்வு செய்கிறார்

சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள ஆசான் நினைவு முதுநிலைபள்ளியில் உள்ள நீட் தேர்வு மையத்துக்கு மாணவிகள் தேர்வு எழுத வந்திருந்தனர். அப்போது நடத்தப்பட்ட சோதனையின்போது துப்பட்டா, காதணி அணிந்திருந்தோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவற்றை கழற்றிக் கொடுத்துவிட்டு மாணவிகள் வந்தபிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டது. இனி தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

மயிலாப்பூரில்,நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தீவிர  பரிசோதனைகளுக்குப் பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தாம்பரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 960 மாணவ, மாணவிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 960 மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 16 தேர்வு மையங்களில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதுகின்றனர். 

திருச்சியில் நீட் தேர்வு 22 மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 8,898 மாணவ மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு மையங்களில் உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறையில் சமூக இடைவெளியுடன் மாணவ மாணவியர்  தேர்வு எழுத  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கைக்கடிகாரம், காதணி ஆகியவை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 16 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் 3,947 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்

நெல்லை மாவட்டத்தில் 17 மையங்களில் நடைபெறவுள்ள நீட் தேர்வில் 6 ஆயிரத்து 792 பேர் தேர்வு எழுதவுள்ளனர். நெல்லையை அடுத்த பாளையங்கோட்டையில் உள்ள மையத்தில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த வாசுதேவனின் மனைவி முத்துலட்சுமி தேர்வு எழுதவந்தார். இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்களே ஆகும் நிலையில், தேர்வு மையத்துக்குள் நகைகள் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால், கழுத்திலிருந்த தாலி சங்கிலி, காலில் அணிந்திருந்த மெட்டி, தலையில் வைத்திருந்த பூ ஆகியவற்றை அங்கு வந்திருந்த குடும்பத்தினரிடம் கழற்றி கொடுத்து விட்டு சென்றார்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 2 மையங்களில் 1,800 மாணவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 35 மையங்களில் 14   ஆயிரத்து 73 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக  உடல் வெப்ப அளவு பரிசோதனை நடத்தப்பட்டு,   2 மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் போட்டு மாணவர்களை வரிசையாக நிறுத்தி, ஹால்டிக்கெட் உள்ளிட்டவை பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments