கொடுமுடி கோயில்களில் போலி ரசீது; ரூ.3.50 கோடி மோசடி! 'கில்லாடி ' செயல் அலுவலர் சஸ்பெண்ட்

0 5251

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 5 கோவில்களில் போலி ரசீதுகள் அச்சடித்து ரூ. 3 . 50 கோடி மோசடியில் ஈடுபட்டதாக செயல் அலுவலர் முத்துச்சாமி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. சிவன்,விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளைக் கொண்ட இந்த  கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் காவிரி கரையை ஒட்டி அமைந்துள்ளதால் பரிகார ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து பரிகார காரியங்கள் செய்து காவிரியில் புனிதநீராடி செல்வார்கள்.செவ்வாய் தோசம்,நாக தோசம் உள்ளிட்டவற்றுக்கு பரிகார ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. .

இந்தக் கோயிலில் சேலத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். கொடுமுடி அருகேயுள்ள ஊஞ்சலூர் வரதராஜபெருமாள் கோயில் உள்பட 5 கோயில்கள் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கொடுமுடி உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்கும் போலி ரசீதுகள் அச்சடித்து அதன் மூலம் பல கோடி ரூபாய் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், நன்கொடையாளர்கள் கோயிலுக்கு வழங்கும் தொகைக்கு போலி ரசீதுகளைக் கொடுத்து பணத்தை கோயில் கணக்கில் சேர்க்காமல் முறைகேடு செய்துள்ளதாகவும் முத்துசாமி மீது புகார் எழுந்தது.

பக்தர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் உரிய விசாரணை மேற்கொள்ளவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். புகாரின்பேரில் தனி அலுவலர்களைக் கொண்ட இரண்டு விசாரணைக் குழுக்களை இந்துசமய அறநிலையத்துறை நியமித்தது.

இரண்டு குழுக்களும் கடந்த ஒரு மாத காலமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். கோயில்களில் பராமரிக்கப்பட்டு வந்த வரவு,செலவுக் கணக்குகளையும் விசாரணைக் குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர். விசாரணை மற்றும் தணிக்கையில் செயல் அலுவலர் முத்துச்சாமி சுமார் ரூ. 3.50 கோடி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, விசாரணை அறிக்கை தமிழக இந்துசமய அறநிலையத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையின் அடிப்படையில் செயல் அலுவலர் முத்துச்சாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பனிந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார்.  விசராணை முடிவடையும் வரை முத்துச்சாமி ஈரோடு மாவட்டத்தை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments