ரூ. 12,000 செல்போன் ரூ. 2,999 என பேஸ்புக்கில் போலி விளம்பரம்... சீட்டுக்கட்டு டெலிவரி செய்தவருக்கு தர்மஅடி!

0 36235


பேஸ்புக்கில் ரூ.12,000 மதிப்புள்ள செல்போனை ரூ. 2,999 க்கு தருவதாக பேஸ்புக்கில் போலி விளம்பரம் வெளியிட்டு பணம் பறிக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சி அரசன்கழனி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி . இவர், பள்ளியில் படித்து வரும் மகளுக்கு ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 3- ஆம் தேதி பேஸ்புக்கில் ரூ.12,000 மதிப்புள்ள செல்போனை 2,999 - க்கு வழங்குவதாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. டெலிவரிக்கு பிறகு பணம் கொடுத்தால் போதுமானது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆன்லைனில் செல்போனை முகமது அலி ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில், ஆர்டர் செய்த 6 நாள்களுக்குப் பிறகு சரவணன் என்பவர் பார்சலை டெலிவரி செய்ய வந்துள்ளார். முகமது அலி அவரிடத்தில் பணத்தை கொடுத்து விட்டு பார்சலை வாங்கியுள்ளார்.

இதற்டையே, சந்தேகம் ஏற்பட்டதால், சரவணன் கண் முன்பே முகமது அலி பார்சலை பிரித்தார். உள்ளே செல்போனுக்கு பதிலாக சீட்டுக்கட்டுகள் இருந்துள்ளன. கோபமடைந்த முகமது அலி சரவணனிடத்தில் இது பற்றி கேட்ட போது, டெலிவரி செய்வது மட்டும்தான் என் வேலை உள்ளே இருக்கும் பொருள் பற்றி எங்களுக்கு தெரியாது என்று பதில் வந்துள்ளது. இதையடுத்து, முகமது அலி சத்தம் போடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சரவணனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அவர்களிடத்திலிருந்து தப்பிய சரவணன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து , காவல்துறையினர் முகமது அலியை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் முகமது அலி நடந்ததை கூறினார். சரவணனிடத்தில் காவல்துறையினர் விசாரித்த போது, 'தங்களுக்கு வந்த பார்சலை டெலிவரி செய்வது மட்டுமே எங்கள் வேலை' என்று தெரிவித்துள்ளார்.  பிறகு, சரவணன் வேலை பார்த்த நிறுவனத்தின் விலாசம், போன் எண், செல்போன் எண்களை வாங்கி விட்டு போலீசார் அவரை‘அனுப்பி வைத்து விட்டனர்.

ஆன்லைன் வழியாக இது போன்ற மோசடியில் மிகப் பெரிய நெட்வொர்க் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments