தங்க நினைவுச் சின்னத்துடன் வடகொரியாவில் 6 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை கண்டுபிடிப்பு!

0 14387
வடகொரியா கல்லறை

கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால கல்லறையொன்றை வடகொரிய தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். வடகொரிய செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கல்லறை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வடகொரியாவின் தெற்கு ஹ்வான்ஹே மாகாணத்தில் உள்ளது அனாக் கவுண்டி. இந்தப் பகுதியில் தொல்லியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், வட கொரியாவிலேயே முதல் முறையாகச் சுவர் ஓவியங்களுடன் கூடிய பழங்கால கல்லறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறையானது தங்க நினைவுச் சின்னங்களுடனும் சுவர் ஓவியங்களுடன் காணப்படுகிறது. கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை கொரியத் தீபகற்பத்தை ஆட்சி செய்த கோகுர்யோ அரச மரபைச் சேர்ந்தவர்களின் கல்லறை இது என்று தொல்லியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து வடகொரியத் தொல்லியல் நிபுணரான கிம் க்வாங் ஹ்யோக், “வடகொரியாவில் நான்கு காவலர்களின் சுவர் ஓவியம் வரையப்பட்ட கல்லறையை முதல் முதலில் கண்டறிந்துள்ளோம். ஹ்வான்ஹே மாகாணம் தான் கோகுர்யோ அரச மரபின் அதிகார மையமாக இருந்ததை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இதுவரை கோகுர்யோ அரச மரபைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கல்லறைகள் வடகொரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுவரோவியம் கொண்ட கல்லறை தனிச்சிறப்பு மிக்கது என்று வடகொரியாவின் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல்,  கோகுர்யோ கல்லறைகள் தொகுப்பானது யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரியச் சின்னமாக 2004 - ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments