தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யக்கூடும்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கோவை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யகூடும். சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மாவட்டங்களில் லேசான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், ஆக.12 முதல் ஆக.16-ம் தேதிவரை மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 2.5 மீட்டர் முதல் 3.6 மீட்டர் வரை கடல் அலை மேல் எழும்பக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments