பாஜகவில் சேரப்போவதில்லை-சச்சின் பைலட் திட்டவட்டம்

0 2669

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காததது குறித்து 2 நாட்களில் பதிலளிக்குமாறு, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருக்கு,  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே தான் பாஜகவில் இணையப்போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் தொடர்வதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜஸ்தானில் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்திய நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. ஆனாலும் 107 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்தில்லை என அசோக் கெலாட் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும் சச்சின் பைலட் ராஜஸ்தான் துணை முதலமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகிய இரு பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது ஆதரவாளர்களான 2 அமைச்சர்களது பதவியும் பறிக்கப்பட்டது.

இதனிடையே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருக்கு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பதிலளிக்கவில்லை எனில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர்கள் விலகிவிட்டதாக பொருள் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தாம் பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக கூறப்படுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சச்சின் பைலட், பாஜகவில் இணையப்போவது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்துள்ள அவர், பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் தான் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான் என தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரசின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த தானே, எதற்காக தனது சொந்தக் கட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும் சச்சின் பைலட் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிடம் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், தன் மீதான நம்பிக்கையை குலைக்கவும் சிலர் தான் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்களை பரப்பி வருவதாகவும் பைலட் கூறியுள்ளார்.

இதனிடையே சச்சின் பைலட்டுக்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, அவர் இன்றைக்கே வந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், ஆனால் அவர் அந்த நிலையை எல்லாம் கடந்து சென்று விட்டதால், தற்போது அதற்கான தேவை இருக்காது என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments