விகாஸ் துபே சுட்டுக் கொலை.. உ.பி. போலீசார் என்கவுன்டர்..!

0 12048

உத்தரபிரதேசத்தில் எட்டு போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி கும்பலின் தலைவர் விகாஷ் துபே என்கவுண்டரின் சுட்டுக் கொல்லப்பட்டான்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள பிக்ரு கிராமத்தைச் சேர்ந்த தாதா விகாஸ் துபேயை கொலை முயற்சி வழக்கில் போலீசார் 2ம் தேதி கைது செய்ய சென்றபோது, அவனும், அவனுடைய ரவுடி கும்பலும் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் 8 போலீசார் பலியான நிலையில், மேலும் 7 போலீசார் காயமடைந்தனர்.

போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே உள்ளிட்டோர் தப்பி தலைமறைவாகினர். இதைத் தொடர்ந்து விகாஸ் துபே குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்து தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டனர்.

உத்தர பிரதேசத்திலும், அண்டை மாநிலங்களான ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களிலும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது துபேயின் நெருங்கிய கூட்டாளி அமர் துபே உள்ளிட்ட 3 பேர் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகா காளி கோயிலுக்கு துபே நேற்று வந்தபோது, அங்கிருந்த போலீசார் அவனை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநில போலீசாரிடம் அவனை மத்திய பிரதேச போலீசார் ஒப்படைத்தனர்.

இதன்பின்னர் அவனை கான்பூருக்கு உத்தர பிரதேச அதிரடிப்படை போலீசார் தங்களது வாகனத்தில் அழைத்து வந்தனர். கான்பூர் அருகே பார்ரா எனும் பகுதியில் வாகனம் இன்று காலை சுமார் 7 மணியளவில் வந்தபோது மழையின் காரணமாக சாலை வலுக்கியதால் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த போலீசார் ஒருவரின் கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு விகாஸ் துபே தப்ப முயன்றதாக சொல்லப்படுகிறது.

போலீசாரை கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் அவர்களை நோக்கி விகாஷ் துபே துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விகாஸ் துபே பலத்த காயமடைந்தான்.

இதில் காயமடைந்த துபேயை ஸ்ட்ரெச்சரில் போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு துபேயை பரிசோதித்த மருத்துவர்கள், உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க கான்பூர் ஐ.ஜி. மொஹித் அகர்வால், வாகனம் கவிழ்ந்த விபத்தில் 4 போலீசார் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

என்கவுன்டர் குறித்து கான்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், துபேயை சரணடையும்படி கூறியதாகவும் ஆனால் அவன் சரணடைய மறுத்ததோடு, துப்பாக்கியால் சுட்டதாகவும், இதையடுத்து தற்காப்புக்காகவே துபேயை நோக்கி போலீசார் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் கான்பூர் காவல்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கான்பூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் அனில்குமார், துபே துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், உண்மையில் கார் கவிழவில்லை, ரகசியங்கள் வெளியாகி ஆட்சி கவிழ்வதில் இருந்து உத்தர பிரதேச அரசு காக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். விகாஸ் துபே கைது செய்யப்பட்டாரா அல்லது சரணடைந்தாரா என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments