தளர்வுகளின்றி முழுமையான ஊரடங்கு..!

0 3170

சென்னையில் இன்று எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த ஊரடங்கு கால கட்டத்துக்குள் வரும் இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வுகள் ஏதுமின்றி முழு ஊரடங்கு மிகத்தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முழுமையான ஊடரங்கில் தனியார் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த வாகனங்கள், மருந்தகங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றை தவிர காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. அதே போல் பிற வாகனங்கள் சாலைகளில் சென்று வர அனுமதிக்கப்படவில்லை.

இதனால் சென்னையின் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பெரும்பாலான சாலைகளில் போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். காவல்துறை உயரதிகாரிகளும் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

தீவிர வாகன சோதனை நடத்தி அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர தேவையின்றி வெளியே வருவொரின் வாகனங்களை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை காலை 6 மணி வரை இந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதன் பின்னர் நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அத்தியாவசியக் கடைகள் அனைத்தும் திறந்திருக்கும்.

இதனிடையே புளியந்தோப்பு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர தேவையின்றி வெளியே வந்தவர்களின் 50க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த  வாகனங்களை திரும்ப கேட்டு புளியந்தோப்பு காவல் நிலையம் முன்பு கூடிய சிலரை, கூட்டம் கூடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு தான் வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் இன்று தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒருசில கனரக சரக்கு வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. சென்னை பெருநகர போலிசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் முழுமையான ஊரடங்கினால் எவ்வித அத்தியாவசியக் கடைகளும், உணவகங்களும் திறக்கப்படாத போதும், ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு அம்மா உணவகங்கள் மட்டும் செயல்பட்டன. தியாகராயநகர் தெற்கு உஸ்மான் சாலையிலுள்ள அம்மா உணவகத்தி நீண்ட வரிசையில், தனிநபர் இடைவெளியுடன் காத்திருந்து பொதுமக்கள் உணவு வாங்கி சென்றனர். முழு ஊரடங்கையொட்டி சென்னையிலுள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

முழு ஊரடங்கையொட்டி எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை நேற்று நள்ளிரவே மூடப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளோ, வியாபாரிகளோ வராததோடு, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியே வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஊரடங்கால் பல்வேறு இடங்களில் காய்கறி கடைகள் திறக்கப்படாமல் இருப்பதால் கடந்த 2 தினங்களாக விற்பனை குறைந்து காய்கறிகள் டன் கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments