தமிழகத்தில் மேலும் 2115 பேருக்கு கொரோனா

0 7864

தமிழகத்தில், ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, 3- ஆவது நாளாக நீடித்துள்ளது. உக்கிரம் காட்டும் கொரோனா, உச்சம் தொட்டு, தமிழகத்தில் அதிர்வலையை உருவாக்கி உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 115 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. அதாவது, 2 ஆயிரம் பேருக்கு மேல் ஒரே நாளில் பாதிக்கப்பட்டிருப்பது, இது 3- ஆவது நாளாகும். இதன் மூலம் கொரோனா பாதிப்பு 54 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் 15 பேர் உள்பட மொத்தம் 41 பேர் பலி ஆனார்கள். இவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 5 பெண்களும், அரசு மருத்துவமனைகளில் 6 பெண்களும் அடங்குவர். ஓசூரில் 40 வயது ஆண் ஒருவர், அரசு மருத்துவமனையில் பலி ஆனார். எனவே, தமிழகத்தின்கொரோனா உயிர்ப்பலி 666 ஆக உயர்ந்தது.

ஒரே நாளில், அதிகபட்சமாக 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை சுமார் 8 லட்சத்து 28 ஆயிரத்தை நெருங்கி உள்ளதாகவும் சுகாதாரத்துறை, மாலையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 630 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதேநேரம், பல்வேறு மருத்துவமனைகளில் சுமார் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மட்டும் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆகவில்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments