தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்... இனிமேல், சேலத்துக்காரர்கள் தாராளமாக காலரை தூக்கலாம்!

0 18291

மிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் முக்கிய இணைப்பு நகராகத் திகழ்கிறது சேலம். தமிழகத்தின் ஐந்தாவது பெருநகரான சேலத்தில் தான் முக்கிய  நுகர் பொருள்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. மல்கோவா மாம்பழம், இரும்புத் தொழிற்சாலை,  மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் மாங்கனீசு, வெள்ளி உள்ளிட்ட தாதுப்பொருள்களுக்கு சேலம் ரொம்பவே பாப்புலர். இத்தகைய புகழ்பெற்ற சேலம் நகரத்தில்தான் தமிழகத்திலேயே மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 

image

தமிழகத்தின் முக்கியமான தொழில் நகராக உருவெடுத்துவருகிறது சேலம். சேலத்தின் ஐந்து ரோடு பகுதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் வாகனங்கள் கடப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறுகிய சாலைகளை உடைய சேலத்தில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும். தென்னிந்திய மாநிலங்களுக்கு இணைப்பு நகராகத் திகழ்வதால் திருவிழா காலத்தில் சேலம் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறிவிடும். பேருந்து நிலையத்துக்குள் சென்று மாநகரத்தை விட்டு வெளியே வரவே பஸ்கள் படாத பாடு படும் நிலை இருந்தது. இதைக் கருத்தில்கொண்டு சேலத்தில் இரண்டடுக்கு போக்குவரத்து மேம்பாலத் திட்டத்தை ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக 2016 - ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.441 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்ற சேலம் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். மொத்தம் 7.87 கி.மீ நீளம் கொண்ட பிரமாண்ட பாலம் இது. 


மேம்பாலத்தைத் தாங்க 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிநவீன சிசிடிவி கேமரா, இரவிலும் பகலைப் போல் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேம்பாலத்தைத் திறந்துவைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சேலம் மக்களின் நீண்ட கால திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பாலம் திறக்கப்பட்டிருப்பதால் இனி சேலத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். இரண்டடுக்கு மேம்பாலத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரும் ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் உள்ள பாலத்துக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பெயரும் சூட்டப்படுகிறது. தமிழகத்தின் மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலம்' என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது.'' என்று மகிழ்ந்திருக்கிறார். 

image

சேலத்தில் மேம்பாலப் பணிகளைப் போன்றே ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் முதல் கட்டமாக அறிவித்த 27 நகரங்களில் சேலம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் தடையில்லா மின்சாரம், தரமான சாலைகள், போதிய தண்ணீர் வசதி, வைஃபை வசதி ஆகியவை அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 2015 - ம் ஆண்டிலேயே திட்டப்பணிகள் சமர்ப்பிக்கப்பட்டன. பொது மக்களிடம் கேட்கப்பட்டபோது, வ.உ.சி மார்க்கெட் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகியவற்றின் மறுகட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் தற்போது சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை இடித்து அகற்றி நவீன கட்டமைப்பில் புது பேருந்து நிலையத்தைக் கட்டி வருகிறது, மாநகராட்சி நிர்வாகம். இதே போன்று பலமாடி வாகன நிறுத்துமிடங்கள், ஷாப்பில் மால், வணிக வளாகங்கள்ஆகியவை சிட்டி திட்டத்தின் அடிப்படையில் எழுப்பப்படுகிறது. அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வரும் பிரமாண்ட திட்டங்களால் சேலம் தமிழகத்தின் முக்கியமான மாநகராக  மாறிவருகிறது! 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments