கொரோனா பரவுவதை தடுக்க மதம்சார்ந்த கூட்டங்களை அனைத்து மதத்தினரும் தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர்

0 2338

அத்தியாவசிய பொருட்களை வாங்க, காலை 6.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவுவதை தவிர்க்க, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவுக்கு மதச்சாயம் பூசுவதை  அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் வெறுப்புணர்வுடன் பார்க்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து மருத்துவமனைகளையும் அழைத்து பேசி, அவை திறப்பதற்கும் செயல்படுவதற்கும் தேவையான பணியாளர்களை அனுமதிக்க, உரிய  வாகன வசதிகளை ஏற்பாடு செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், இதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க அரசு தரப்போடு இணைந்து சமூக ஆர்வலர்கள் செயல்படலாம் என்றும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6.00 மணி முதல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவு குறைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.  ஞாயிற்றுக்கிழமை முதல், காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும் என முதலமைச்சர்  தெரிவித்துள்ளார். இதை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments