கொரோனா வைரஸ் - 60 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

0 9996

கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து 60வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் நலனில் தனிகவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு காய்ச்சல், இருமல் மூச்சுத்திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும் என்றும் இந்நோய் தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் இரண்டு வகைகளில் பரவுகிறது என்றும் நோய் அறிகுறி கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர்த் திவலைகள் காற்றின் மூலம் அருகில் உள்ள நபர்களுக்கு நேரடியாக பரவுகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று நோய் அனைத்து வயதினரையும் பாதிக்கிறது என்றும் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டோர் நோய் தொற்று வராமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி வீட்டிலுள்ளவர்களிடமிருந்து தனித்து இருத்தல் வேண்டும் என்றும் சமூக இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் கைகளை சோப்பால் அவ்வப்பொழுது கழுவி சுத்தம் செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், வெளி நபர்களுடன் கலந்துரையாடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் உற்றார், உறவினர் மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடி மகிழலாம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி தாங்கள் அன்றாடம் உட்கொள்ளும் மருந்துகளை வேளை தவறாது எடுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்த அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் காற்றோட்டமான அறைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முடிந்தவரை குளிரூட்டிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வெதுவெதுப்பான தண்ணீரினை அவ்வப்போது அருந்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொண்டை வலி, காய்ச்சல், சளி இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் 104 அவசர தொலைபேசி எண் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 120 555550-ல் தொடர்பு கொள்ளலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments