இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு

0 4636

கொரோனாவின் உச்சகட்ட தாக்குதலால் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளே நிலைகுலைந்து போய் உள்ளன. இத்தாலியில் ஏறத்தாழ 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் புதிதாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதில், 3 ஆயிரத்து 500 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் இத்தாலியில் 683 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

கடந்த மாதம் 25ம் தேதி சுழியமாக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அங்கு தினசரி இறப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருப்பதால் ராணுவ வாகனங்களில் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு மொத்தமாக அடக்கம் செய்யப்படுகின்றன.

மேலும் கிறிஸ்தவ நாடான இத்தாலியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டி கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்கனவே 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 500 பேர் புதிதாக கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 ஆயிரத்து 200 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நாட்டில் நேற்று மட்டும் 656 பேர் மரணித்துள்ளனர். மூன்றாவதாக பிரான்ஸ் நாட்டில் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 3 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது.

இவர்களில் 2 ஆயிரத்து 800 பேர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நாடுகள் தவிர ஈரானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 143 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகி உள்ளனர். இந்த உயிரிழப்புகளை எப்படி கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments