நித்தி அடி கும்பல் செயல் தலைவர் தூக்கில் தொங்கினார்..! ஆசிரம காதல் பரிதாபம்

0 7067

நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவர் காதலில் தோல்வி அடைந்ததால் வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இல்லாத கைலாசாவிற்கு அதிபராக பதுங்கி வாழும் நித்தியின் சீடர்கள், அடுத்தடுத்து உயிரிழந்து வருவதன் மர்மம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நித்தியானந்தாவை மாதக்கணக்கில் காவல்துறையினர் தேடிவருகின்றனர். இந்த நிலையில், இல்லாத கைலாசாவிற்கு அதிபராக உள்ள நித்தியை நம்பி முகநூலில் கைலாசவாசி என்று புரொஃபைல் படம் வைத்த சீடர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே 3 சீடர்கள் உயிரிழந்த நிலையில் நான்காவதாக ஒரு சீடர் சேலம் மாவட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தலைவாசல் அடுத்த ஆரகலூர் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் - கலையரசி தம்பதியரின் மகன் தினேஷ். 27 வயதான முதுகலை பொறியியல் பட்டதாரியான தினேஷ், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால், கடந்த 2017ஆம் ஆண்டு நித்தியானந்தா ஆசிரமத்தில் சீடராக சேர்ந்துள்ளார்.

தனது பெயரை ஸ்ரீநித்ய வீர பத்ரானந்தா என மாற்றிக் கொண்டு, நித்தி அடி கும்பல் என்ற பெயரில் இயங்கிய மீம்குழுவில் செயல் தலைவராக இருந்து நித்திக்கு எதிராக பேசுபவர்களுக்கு மீம்ஸ் மூலம் பதில் அடி கொடுத்து வந்துள்ளார்.அப்போது அதே ஆசிரமத்தில் நித்தியின் சிஷ்யையாக இருந்த ஒரு பெண்ணுக்கும் தினேசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கு தெரியவந்ததும், தனது மகளுக்கு ஜாதகத்தில் தோஷம் எனக் கூறி தினேஷை தவிர்த்துள்ளார்.

இதற்கிடையே தங்கள் மகன் கபட நாடக வேஷதாரியான நித்தியிடம் இருப்பதை அறிந்த தினேஷின் பெற்றோர், மகனிடம் நித்தியின் லீலைகளை எடுத்துச்சொல்லி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பெண் சிஷ்யை மீதான காதலால், நித்தியின் ஆசிரமத்தை பிரிய மனமில்லாமல் தவித்த தினேஷ், சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறி, திரிசூலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதி ஒன்றில் கண்டெய்னரில் ஆசிரமம் நடத்திவரும் நித்தியின் சென்னை கிளையில் கைலாசவாசியாக இணைந்து மீண்டும் பத்ரானந்தாவானார்..!

நித்தியானந்தா நியூஸ் என்பதை சுருக்கி என் நியூஸ் என்ற பெயரில் யூடியூப் செய்தி சேனல் நடத்திவந்த பத்ரானந்தா, நித்தியின் நம்பிக்கைகுரிய சீடர்களின் ஒருவராக வலம் வந்தபடியே தனது காதலையும் வளர்த்துள்ளார்.

துறவிகளுக்குள் மலர்ந்த காதல் அவ்வப்போது பற்றிக் கொண்ட நிலையில், தினேஷ் ஒரு பெண் பித்தன், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு வீடியோ எடுத்து மிரட்டிவருகிறான் எனக் கூறி தனது மகளின் மனதை மாற்றியதோடு, காதலுக்கும் எண்டு கார்டு போட்டுள்ளார் காதலியின் தந்தை..! இதனால் காதலி தினேஷிடம் பேச மறுத்ததாக கூறப்படுகின்றது.

விரக்தியில் வியாழக்கிழமை தனது ஊருக்கு சென்று தந்தை ராமச்சந்திரனிடம், தனது காதல் விவகாரத்தை சொல்லி அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கூறியுள்ளார் தினேஷ் . அதுபற்றி குடும்பத்தினர் எந்த கருத்தும் கூறாத நிலையில், தாய் தந்தை இருவரும் வெளியே சென்று விட்ட நேரத்தில், கதவை தாளிட்டு காதல் தோல்வி குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்ட தினேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திரும்பிய பெற்றோர், போலீசுக்கு தெரியாமல் உடனடியாக உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தலைவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே நேபாளத்தில் ஒரு சீடரும், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் ஒரு சீடரும், புதுச்சேரியில் ஒரு சீடரும் என 3 பேர் மர்மமான முறையில் விபத்து, தற்கொலை,கொலை என உயிரிழந்த நிலையில் தற்போது நான்காவதாக கைலாசவாசியான தினேஷ் என்கிற பத்ரானந்தா தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்கின்றனர் காவல்துறையினர். இந்த தொடர் மரணங்களின் பின்னணியில் சீடர்கள் வசூலித்துக் கொடுத்த மிகப்பெரிய பணப்பறிமாற்றம் மறைந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

கத்தரிக்காய் மட்டும் அல்ல காதலும் ஒரு சிலருக்கு வாழ்வில் ஒவ்வாத விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments