தாய்லாந்தில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய ராணுவ வீரர் சுட்டுக் கொலை

0 871

தாய்லாந்து நாட்டில் குருவியை சுடுவது போல 26 பேரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரரை பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுட்டுக் கொன்றனர்.

தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியான நஹோன் ரேட்சசிமாவை (Nakhon Ratchasima ) சேர்ந்த 32 வயதான ராணுவ வீரர் ஜக்ராபாந்த் தொம்மா (Jakrapanth Thomma), பிதக் ராணுவ முகாமில் (Phithak military camp) இருந்த அதிகாரி, அவரது மாமியார், இன்னொரு வீரர் ஆகியோரை நேற்று மதியம் 3.30 மணிக்கு சுட்டுக் கொன்றார்.

பின்னர் ராணுவ முகாமில் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை எடுத்து கொண்டு, ஹம்வி ரக கவச வாகனத்தில் வெளியேறி, வழியில் தென்பட்டோரை துப்பாக்கியால் சுட்டபடி சென்றார்.

பின்னர் கூட்டம் மிகுந்து காணப்படும் டெர்மினல் 21 கோரட் வணிக வளாகத்துக்கு வந்து கவச வாகனத்தை நிறுத்திய தொம்மா, அங்கு வெளியே கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் இருந்தோரை குருவியை சுடுவது போல சுட்டுத் தள்ளிவிட்டு, வணிக வளாகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்தினார். இதுகுறித்த தகவலின்பேரில் டெர்மினல் 21 வணிக வளாகத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், வணிக வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் காயமடைந்து கிடந்தோரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பும், துப்பாக்கிச்சூட்டின் இடையேயும் செல்போனில் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் தொம்மா தொடர்ந்து வெளியிட்டபடி இருந்தார். அந்த படத்தின்கீழ் யாரும் மரணத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்றும், இவர்களை உயிரோடு விட வேண்டுமா என்றும் பல்வேறு பதிவுகளை அவர் வெளியிட்டார். உடனடியாக அவரது பேஸ்புக் பக்கத்தை முடக்கிய அதிகாரிகள், பின்னர் வணிக வளாகத்துக்குள் புகுந்து ஒவ்வொரு பகுதியாக தொம்மாவை சல்லடை போட்டு தேட ஆரம்பித்தனர்.

நேற்று மாலை முதல் விடிய விடிய சுமார் 16 மணி நேரம் தொம்மாவை பாதுகாப்புப் படையினர்  தேடினர். இந்நிலையில் கட்டிடத்தில் பதுங்கியிருந்த தொம்மாவை இன்று காலை சுட்டுக் கொன்றனர்.

தொம்மாவின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியானதாகவும், மேலும் 57 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் துப்பாக்கிச் சூடு மிகவும் அரிதான ஒன்றாகும். இந்நிலையில் அங்கு  இத்தாக்குதல் நடைபெற்றிருப்பது தாய்லாந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண நெருக்கடியால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே ராணுவ வீரர் தொம்மா வன்முறையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments