திருடுபோன பைக்..! GPS மூலம் துப்பு துலக்கிய இளைஞர்..! கண்டு கொள்ளா போலீஸ்

0 1558

சென்னையில் இருந்து பொங்கல் கொண்டாட ஊருக்கு சென்றவரின் மோட்டார்சைக்கிள், திருடப்பட்ட நிலையில் ஜிபிஎஸ் உதவியால் துப்புத் துலக்கி திருடப்பட்ட வாகனத்தை சில மணி நேரங்களில் சாமர்த்தியமாக மீட்டுள்ளார் இளைஞர் ஒருவர். "பைக் திருட்டு புள்ளீங்கோ" குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளாத சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

சென்னை நந்தனத்தை சேர்ந்த ஆன்லைன் நிறுவன ஊழியர் சந்தோஷ். இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்றுள்ளார். கடந்த 18 ந்தேதி அதிகாலை 2 மணிக்கு தனது பல்சர் பைக் திருடப்பட்டதை தன் வாகனத்தில் பொருத்தியுள்ள ஜிபிஎஸ் மூலம் செல்போனில் அலாரம் ஒலித்ததால் தெரிந்து கொண்டுள்ளார் சந்தோஷ்.

எந்த ஒரு பதற்றமும் இன்றி தர்மபுரியில் இருந்தபடியே தன் செல்போன் மூலம், திருடப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் எங்கெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை கண்காணித்துக் கொண்டிருந்தார். இறுதியாக மயிலாப்பூர் மற்றும் அபிராமபுரம் எல்லைப் பகுதியில் தனது இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டு சென்றதும், தனது செல்போனில் உள்ள ஜிபிஎஸ் தொடர்பு மூலமே ஓடிபியை பதிவிட்டு வாகனத்தின் இயக்கத்தை முடக்கினார்.

மறுநாள் ஊரில் இருந்து திரும்பிய சந்தோஷ், தனது செல்போனில் ஜிபிஎஸ் சுட்டிக்காட்டிய பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து, காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100க்கு அழைத்தார். போலீசாரிடம் தனது மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட விவரத்தை கூறி ஜிபிஎஸ் மூலம் அது கண்டுபிடிக்கப்பட்ட விதத்தையும் எடுத்து கூறியுள்ளார் சந்தோஷ்.

அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து பார்த்தபோது வண்டியின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை தூக்கிச்சென்றது இரு திருட்டு புள்ளீங்கோக்கள் என்பது தெரியவந்தது.

திருடப்பட்ட பின்னர் தனது வாகனத்தை புள்ளீங்கோக்கள் செயின் பறிப்பு போன்ற ஏதாவது விபரீத செயல்களுக்கு பயன்படுத்தி இருப்பார்களோ ? என்ற அச்சத்தில் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு சென்று சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார் சந்தோஷ்.

"வண்டி கிடைத்து விட்டதல்லவா ? புகார் எதற்கு கிளம்பு..!" என அங்கிருந்து விரட்டியவர்கள் பைக் திருட்டுப் போனது சைதாப்பேட்டை போலீஸ் எல்லை என்று கூறியுள்ளனர். சைதாப்பேட்டையிலோ இன்னும் பாஸ்ட்..! வண்டியை ஸ்டேசனில் விட்டு சென்றால் இன்னும் ஒன்றரை மாதத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டு கூப்பிடுகிறோம் என்று பதற வைத்துள்ளனர்.

அதோடில்லாமல் "சிசிடிவியில இருப்பவர்கள் கோட்டூர்புரம் காவல் நிலைய பகுதியில் இருக்கிறவங்க, அங்க போய் புகார் கொடு" என்று திருப்பி அனுப்பி உள்ளனர் கோட்டூர்புரத்தில் திருட்டு புள்ளீங்கோக்களை அடையாளம் கண்டு, ஒருவன் நவீன் மற்றொருவன் நாகராஜ் என்று விளக்கிய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, "ஆனால் இவனுங்க திருந்த மாட்டானுங்க தம்பி, வண்டி கிடைச்சிடுச்சில்ல வேலையை பாரு...!" என்று ஆறுதலாக அட்வைஸ் கொடுத்து திருப்பி அனுப்பியதாக ஆதங்கப்படுகிறார் சந்தோஷ்..!

தனது வாகனத்தைப் போல மற்றவர்களின் வாகனங்களை திருட்டு புள்ளீங்கோக்கள் தூக்கிச்சென்று விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் புகார் அளிக்க, தான் மேற்கொண்ட முயற்சிகள் காவல் ஆணையரின் கவனத்துக்கு சென்றால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் சந்தோஷ்.

இரு சக்கர வாகனம் மற்றும் கார்கள் திருடப்பட்டால் அவற்றை கண்டுபிடிக்க ஜிபிஎஸ் ஒரு முக்கிய சாதனமாக பயன்படுகின்றது. 2 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான சிம்கார்டுடன் கூடிய இந்த ஜிபிஎஸ் கருவியை வாகனத்தில் மறைவான பக்கத்தில் பொறுத்தி விட்டால் போதும் எளிதாக வாகனம் எங்கே உள்ளது என்பதை கண்டறிந்து விடலாம் என்று சுட்டிக்கட்டும் சந்தோஷ், வீட்டுக்குள் வாகன நிறுத்த வசதி இல்லாத இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஜி.பி.எஸ். பொருத்தி அதன் இணைப்பை 5 மொபைல் போன்களுக்கு பகிர்ந்து கொண்டால் வாகனம் திருடப்பட்டால் அலாரம் ஒலித்து காட்டிக் கொடுத்து விடும் என்றும், இருந்த இடத்தில் இருந்தே வாகனம் எங்கே எடுத்து செல்லப்படுகின்றது என்பதை அறிந்து, அதன் இயக்கத்தையும் நிறுத்த இயலும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

சென்னை நகரெங்கும் சிசிடிவி கேமராக்களை வைத்து திருடர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் போலீசார், அதில் இடம் பெற்றுள்ள திருடர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments