களைகட்டும் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்..!

0 673

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை மாதவரத்திலுள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாணவிகள் பட்டுப்புடவை அணிந்து வந்து புதுப் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திரளான மாணவ - மாணவிகள் பங்கேற்று திரைப்பட நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கொள்ளம்பாக்கத்திலுள்ள தனியார் மழலையார் மற்றும் தொடக்கப்பள்ளியில், பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேவுள்ள அண்ணமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் கலைக்கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கபடி, கோணிப் பந்தயம் போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாநகராட்சி ஊழியர்கள் சிலம்பாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் முறுக்கு கடித்தல், பலூன் உடைத்தல் போன்ற பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், காவல் துறையினர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். நிகழ்வில் காவல்துறையினருக்காக கபடி, கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளும், அவர்களது குடும்பத்தினருக்காக வாலிபால், கோலப்போட்டி மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீர் நிரப்புதல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி அரவிந்தன், மாட்டுவண்டியில் ஏறி அலுவலக வளாகத்தை சுற்றி வந்தார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய முறையில் பொங்கல் திருவிழா மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆரவாரத்துடன் நடத்தி பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவ,மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்றது.

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பண்டைய தமிழர்களின் மரபை போற்றும் விதத்தில் கதிரடித்தல், நெல்தூற்றுதல், நாற்றுநடுதல் மற்றும் கோலம்போடுதல் மழலைகள் நடனப் போட்டி ஆகியவை இடம்பெற்றது.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மாணவ - மாணவியர் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். குடிசைகள் அமைத்து வண்ண வண்ண கோலமிட்டும், கரும்புகளை நிறுத்தி வைத்தும், நெற்கதிர்கள், படையல்கள் உள்ளிட்டவற்றை வைத்தும் அவர்கள் பொங்கலிட்டனர்.

மேளங்கள், பறை உள்ளிட்டவற்றை இசைத்தும் வண்ண வண்ண பொடிகளை தூவியும் மாணர்வர்களும், மாணவிகளும் நடனமாடினர்.

மாணவர்களுக்கு இடையே சிலம்பாட்டம், கயிறு இழுத்தல், கபடி, உறி அடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.

புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் தி.மு.க. சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டனர்.

உருளையன்பேட்டை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவா உள்ளிட்டோர் சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜி.ஆர்.டி. பொறியியல் கல்லூரியில் மாணவ - மாணவியர் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

மாணவியரின் கும்மி, பாரம்பரிய உரியடிப் போட்டி உள்ளிட்டவற்றுடன் பொங்கல் விழா களை கட்டியது

தூத்துக்குடி தனியார் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவ - மாணவியர் வேட்டி சேலை அணிந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்

தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை உள்ளிட்டவையும் நடைபெற்றன்.

மாடுகளைப் போன்று வேடமணிந்த மாணவர்களை மற்ற மாணவர்கள் அடக்குவது போன்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருச்சி கலைக்காவேரி கல்லூரியில் பொங்கல் விழா கிராமியக் கலை விழாவாக நடைபெற்றது. விழாவில் மாணவ - மாணவிகளுடன் மெக்சிகோ நாட்டில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர்.

கிராமியக் கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்டவை இடம் பெற்றனசென்னையின் பல்வேறு பகுதிகளில், காவலர் குடியிருப்புகளில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டார்.

அண்ணாநகர், கண்ணகிநகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவலர் குடும்பங்களுடன், அவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பொங்கல் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

ரூர் சின்னாண்டான் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர். ஆசிரியைகளின் கும்மியாட்டம், மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மாட்டு வண்டியில் மாணவ - மாணவியர் பள்ளி மைதானத்தை சுற்றிவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் கலந்து பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.மாணவ மாணவியரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவ மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் மாணவிகள் பாரம்பரிய முறையில் சமத்துவப் பொங்கல் கொண்டாடினர். வண்ணப் புடவைகளை அணிந்து வந்திருந்த அவர்கள் வண்ணக் கோலங்கள் இட்டும் மாவிலைத் தோரணங்கள் கட்டியும் மண்பானைகளில் பச்சரிசி பொங்கலிட்டனர்,

ஒயிலாட்டம், மயிலாட்டம், உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் ரங்கராட்டினம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments