சவாலான அறுவை சிகிச்சை... சாதித்த அரசு மருத்துவர்கள்... பிழைத்தது பிஞ்சுக் குழந்தை...!

0 325

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆசனவாய் துவாரம் இல்லாமல் பிறந்த குழந்தையை சவாலான அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். குழந்தை பிறந்த மறுநாளே அதன் தந்தை இறந்ததால் துரதிர்ஷ்டம் எனக் கருதி உறவினர்களால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை, தாய்ப்பாசத்தால் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொள்ளாச்சியை அடுத்த சுளீஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் - மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், 2வதாக கடந்த 13ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

 பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த அந்தக் குழந்தை, ஆசனவாய் பகுதியில் துவாரம் இல்லாமல் பிறந்துள்ளது. அங்கு குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினால் கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.

மகேஸ்வரி மருத்துவமனையிலேயே இருக்க குழந்தையுடன் மணிகண்டனின் உறவினர்கள் மட்டும் கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில்தான் ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன் சனிக்கிழமை எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து அவரது உறவினர்கள், குழந்தை பிறந்த நேரம் சரியில்லாததால்தான் மணிகண்டன் உயிரிழந்ததாகக் கருதி, மருத்துவமனையிலேயே குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கணவன் இறந்த செய்தி கேட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கதறிக்கொண்டிருந்த மகேஸ்வரிக்கு குழந்தை கோவை மருத்துவமனையிலேயே அனாதையாக விடப்பட்ட செய்தி மேலும் இடியாக இறங்கியது.

இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்ற மகேஸ்வரியின் உறவினர்கள், யாருக்கும் தெரிவிக்காமல் குழந்தையை மீண்டும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கே தூக்கிக்கொண்டு வந்துள்ளனர். இனியும் குழந்தையை அலைக்கழிக்க விடாமல் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என அங்கிருந்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி அதே மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் கண்ணன் என்பவரின் உதவியை நாடியுள்ளனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர் கண்ணனும் உடனடியாக களத்தில் இறங்க, தனியார் ஸ்கேன் செண்டருக்கு குழந்தையை தூக்கிச் சென்று தேவையான ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரேக்களை எடுத்துக்கொண்டு அறுவை சிகிச்சையை தொடங்கினர்.

குழந்தையினுடைய ஆசன வாய்க்கு மேலிருக்கும் குடல் பகுதி சரியாக வளராமல் இருந்ததை மருத்துவர்கள் குழு கண்டறிந்தது. இதனையடுத்து வயிற்றின் இடது புறத்தில் தற்காலிக துவாரம் ஏற்படுத்தி, அதனை குடலுடன் இணைத்து ஒன்றரை மணி நேரத்தில் “கொலாஸ்டமி” என்ற அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். 

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் இந்த மனிதாபிமான செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேநேரம், அவர்களின் வேண்டுகோளை ஏற்று இரவு நேரம் என்றும் பாராமல் வந்து அறுவை சிகிச்சையை முடித்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஓய்வுபெற்ற மருத்துவர் கண்ணனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments