சாலையோர உணவகத்தில் சண்டை .. சிலிண்டரைத் தூக்கிச் சென்ற அடாவடி போலீஸ்..!

0 812

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இரவு குறிப்பிட்ட நேரம் கடந்தும் சாலையோர உணவகத்தை திறந்து வைத்திருந்ததாகக் கூறி, உணவகத்தின் பெண் உரிமையாளரை ஒருமையில் பேசியதோடு, சமையலுக்கு வைத்திருந்த சிலிண்டரை போலீசார் அடாவடியாக தூக்கிச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகேயுள்ள பட்டானூரில் அண்ணா உணவகம் என்ற பெயரில் கணேசமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான சாலையோர உணவகம் இயங்கி வருகிறது. 

சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் உதவி ஆய்வாளர் ஜான் ஜோசப் உட்பட காவலர்கள் அவ்வழியாக ரோந்து சென்றுள்ளனர். அப்போது உணவகம் திறந்திருந்ததாகக் கூறப்படுகிறது. 11 மணி கடந்தும் உணவகத்தை ஏன் திறந்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கச் சென்ற போலீசார், அவர்களை ஒருமையில் திட்டியுள்ளனர். மேலும் கணேசமூர்த்தியின் தாயாரையும் ஒருமையில் திட்டியதோடு, சமையலுக்கு வைத்திருந்த சிலிண்டரையும் போலீசார் தூக்கிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பல ஆண்டுகளாக அங்கு உணவகம் நடத்தி வரும் கணேசமூர்த்தியிடம் அவ்வப்போது அங்கு ரோந்து வரும் போலீசார், உணவு வாங்கிச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதற்கு பணம் எதுவும் பெற்றுக்கொள்வதில்லை என்று கூறுகிறார் கணேசமூர்த்தி

காவலர்களுக்கும் உணவக உரிமையாளர்களுக்கும் இடையில் இத்தனை களேபரங்கள் நடந்தபோதிலும் வாகனத்துக்குள் அமர்ந்திருந்த ஆய்வாளர் மகேஸ்வரி, கீழே இறங்கவில்லை. 

நேரம் கடந்து, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் லாரி ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் பசியாற்றும் இடமாக இதுபோன்ற சாலையோர உணவகங்கள் உள்ளன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை போலீசாரின் வசம் இருந்தாலும் உணவக உரிமையாளரையும் அவரது தாயாரையும் ஒருமையில் வசைபாடியதை தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments