ஆண் வேட பெண்ணை நம்பி ஓடிய அவள்..! சீரழிக்கும் டிக்டாக்

0 1999

கிராபிக்ஸ் மூலம் ஆண்வேடமிட்டு டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண்ணுடன் நெருங்கி பழகிய திருமணமான பெண் ஒருவர், தனது கணவனை விட்டு இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.

டிக் டாக் நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று பலமுறை புத்தி சொன்னாலும் அதில் நேரத்தை கழிக்கும் அதிசயப் பிறவிகள் ஒருபோதும் கேட்பதில்லை, அந்த வகையில் ஆண் வேடமிட்ட பெண்ணுடன் மற்றொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கூத்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது

திருமணமாகி 13 ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் மனைவி அர்ச்சனாவுடன் குடித்தனம் நடத்தி வந்த ரவிக்குமார் என்பவரது குடும்பத்தில் குட்டிச்சாத்தான் போல புகுந்த டிக்டாக்கால் குடும்பமே உடைந்து நிற்கிறது. 2 மகன்களின் தாயான அர்ச்சனா பெங்களூரில் பணிபுரியும் தனது சகோதரி லட்சுமியின் தோழியான அஞ்சலியுடன் டிக்டாக்கில் அறிமுகமாகியுள்ளார்.

அஞ்சலியுடனான டிக்டாக் சகவாசம், அர்ச்சனாவின் வீடுதேடி வந்தது. ஒரு கட்டத்தில் இருவரின் நட்பு இறுகியதால், அர்ச்சனா வீட்டில் அஞ்சலி ஒரு வாரத்திற்கு மேல் ஒன்றாக தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் தன்னை ஒரு ஆண் போல காட்டிக் கொண்டு அர்ச்சனாவை பேசியே மயக்கி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார் அஞ்சலி.

அஞ்சலியுடனான அர்ச்சனாவின் இந்த விபரீத தொடர்பு எல்லைமீறி செல்வதை அறிந்த அவரது குடும்பத்தினர் இருவரையும் சந்திக்கவோ,போனில் பேசவோ என்று கண்டித்துள்ளனர். டிக்டாக் அரக்கனை ஒழிக்க அர்ச்சனாவிடம் இருந்து ஸ்மார்ட் போனையும், பறித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இதனை அறிந்த அஞ்சலி, தனது காதலி அர்ச்சனாவுக்கு புதிதாக போன் ஒன்றை வாங்கி கொடுத்து ரகசியமாக ஃபோனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனை கண்டுபிடித்த கணவர் ரவிகுமார், மனைவி அர்ச்சனாவை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்ற அர்ச்சனா, அங்கு வைத்தும் அஞ்சலியுடன் டிக்டாக் செய்து வந்துள்ளார்

அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த 4 தினங்களுக்கு முன்பு அர்ச்சனா இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அஞ்சலியை தேடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அஞ்சலியும் அர்ச்சனாவும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

டிக் டாக்கிற்கு அடிமையாகி வீட்டில் உள்ளவர்களிடம் அர்ச்சனைக்குள்ளாகும் நடிகையர் திலகங்கள் பலர் தங்கள் குடும்ப வாழ்க்கைக்கு தாங்களே அஞ்சலி செலுத்தும் வகையில் நடந்து கொள்ளும் விபரீதம் தொடர்கிறது என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments