“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

0 609

சேலத்தில் போலி ஆதார் கார்டுகள் மற்றும் பேன் கார்டுகளை தயார் செய்து, துணிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோகப் பொருள் விற்கும் கடைகளுக்குச் சென்று தவணை முறையில் பொருட்களை வாங்கி விற்று மோசடியில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பல் போலீசில் சிக்கியுள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடைகளுக்குச் செல்வது, அதிக விலை கொண்ட டிவிக்கள், பிரிஜ்ஜுகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட முன் தொகை செலுத்தி தவணை முறையில் வாங்குவது, பின் அவற்றை கிடைத்த விலைக்கு விற்றுவிடுவது. இதேபோல் நகைக்கடை, துணிக்கடை என எல்லா கடைகளிலும் கைவரிசை காட்டியிருக்கிறது ஒரு கும்பல்.

தவணை முறையில் பொருட்களை வாங்க ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டுகளை அந்த கும்பல் பயன்படுத்தியுள்ளது. தவணைத் தேதி வந்தும் தொகையை கட்டவில்லையே என அவர்கள் கொடுத்த ஆதார் கார்டின் முகவரிக்குச் சென்று பார்த்த கடைக்காரர்களுக்கு அப்படி ஒரு முகவரியும் இல்லை, அப்படி ஒரு நபரும் இல்லை என்ற அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

இப்படி நூதன முறையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வரை இழந்த கடைக்காரர்கள் பலர் கொடுத்த புகார்கள் அதிகரிக்கவே, தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார்.

மோசடி கும்பல் குறித்து விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், ரகசிய தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை அதிகாலை அழகாபுரத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த 7 பேர் கும்பலை மடக்கினர்.

விசாரணையில் ஒரே நபர் பெயரில் பல முகவரிகளில் போலி ஆதார் மற்றும் பேன் கார்டுகளை உருவாக்கி, கடைகளில் கொடுத்து தவணை முறையில் பொருட்களை வாங்கி மோசடி செய்து வந்தது தெரியவந்தது.

முதல் தவணையை மட்டும் கட்டிவிட்டு பொருட்களை வாங்கும் இந்தக் கும்பல், அதன் பிறகு தலைமறைவாகி விடும் என்று கூறும் போலீசார், போலி கார்டுகளை உருவாக்க அவர்கள் பயன்படுத்திய கணினி, ஒரு ஆம்னி கார், ஏராளமான போலி ஆதார் மற்றும் பேன் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் பல்வேறு கடைகளில் மோசடி செய்துவிட்டு இந்த கும்பல் சேலம் வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாநகர காவல் துணை ஆணையாளர் செந்தில் கூறினார்.

கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக வாடிக்கையாளர்களால் காண்பிக்கப்படும் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளில் உள்ள எண்களைக் கொண்டு உடனடியாக ஆன்லைனில் பரிசோதிக்க வேண்டும் என போலீசார் கூறுகின்றனர்.

அதேபோல் கிரெடிட் கார்டு விவரங்கள், ஓடிபி போன்ற ரகசிய கடவு எண்கள் உள்ளிட்டவற்றை அந்நியர்கள் யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments