தமிழகம் முழுவதும் இன்று தேசிய லோக் அதாலத்..!

0 222

தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றங்கள் எனப்படும் தேசிய லோக் அதாலத் இன்று நடத்தப்படுகிறது.

தேங்கி கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லோக் அதாலத் நடத்த, தேசிய லோக் அதாலத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சமரசம் செய்யத்தக்க வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகளும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் 8 அமர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர,  கீழமை நீதிமன்றங்களில் 479 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 245 வழக்குகளில் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் லோக் அதாலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தொடங்கி வைத்தார். அப்போது சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சேலம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்த சுசீலா என்பவருக்கு விசாரணை நடத்தப்பட்டு நிவாரண தொகையாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான ஆவணங்களை நீதிபதி குமரகுரு  வழங்கினார். இதில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி தனபால், சட்டப்பணிகள் ஆணைய-உறுப்பினர் செயலர் நீதிபதி சோபனாதேவி ஆகியோர் லோக் அதாலத்தை தொடங்கி வைத்தனர். இதில் 4126 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட இருப்பதாக  நீதிபதி தனபால் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments