கார் பரிசு..! கப்சா கும்பல்... வருத்தெடுத்த தருமி - வைரல் ஆடியோ

0 437

ஸ்னாப் டீல் பெயரை பயன்படுத்தி கார் பரிசு விழுந்திருப்பதாக ஆசை வார்த்தைக்கூறி வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்லும் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல் துறையினர் எச்சரித்துள்ள நிலையில், மோசடி செய்ய முயன்ற பெண்ணிடம் திருவிளையாடல் தருமி போல பேசி தப்பிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியை சேர்ந்தவர் கேபிள் ஆபரேட்டர் பாலாஜி. இவரை செல்போனில் தொடர்பு கொண்ட பெண் குரல் ஒன்று ஸ்னாப் டீல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது என்று கூறி அதற்கான சான்று வாட்ஸ் ஆப்பில் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கார் தேவையில்லை எனில் 12 ஆயிரத்து 500 ரூபாயை தாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் கமிஷனாக செலுத்தினால் 12 1/2 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

தன்னை ஏமாற்ற நடக்கும் முயற்சி என்பதை அறிந்து கொண்ட கேபிள் ஆபரேட்டர் பாலாஜி, நேரில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணிடம் திருவிளையாடல் படத்தில் தருமி கதாபத்திரத்தில் நடித்திருக்கும் நாகேஷ் போல பேசி, மோசடியில் இருந்து சாமர்த்தியமாக தப்பியுள்ளார்.

இது போன்று யாராவது குறுந்தகவல் அனுப்பினாலோ, அல்லது ஆசையை தூண்டும் விதமாக பேசினாலோ அது ஒரு மோசடி செயல் என்பதை உணர்ந்து உஷாராகுங்கள் என்றும் எக்காரணத்தை கொண்டும் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிப்பதோ, அவர்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணம் செலுத்தவோ வேண்டாம் என்றும் கவர்ச்சிகரமான இது போன்ற அறிவிப்புகளை நம்பி மோசம் போகாதீர்கள் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments