பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி

0 337

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. 

650 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகத் தொடங்கியது முதலே, கன்சர்வேடிவ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இதுவரை 645 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. அறுதிப்பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை என்ற நிலையில், கன்சர்வேடிவ் கட்சி 362 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இது கடந்த முறை பெற்றதைவிட 47 தொகுதிகள் அதிகம். அந்த கட்சி 43.6 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான லேபர் கட்சி 203 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இது கடந்த முறை வென்ற தொகுதிகளைவிட 59 தொகுதிகள் குறைவாகும். லேபர் கட்சி 32.3 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதுதவிர ஸ்காட்டிஷ் தேசிய கட்சி 48 தொகுதிகளிலும், லிபரல் ஜனநாயகவாதிகள் கட்சி 11 இடங்களிலும், இதரவை 14 இடங்களிலும் வென்றுள்ளன. 1987ஆம் ஆண்டு மார்கரெட் தாட்சர் பெற்ற வெற்றிக்குப் பிறகு, கன்சர்வேடிவ் கட்சி இந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ளது.

மேற்கு லண்டன் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள போரிஸ் ஜான்சன் மறுபடியும் பிரதமராகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் விவகாரத்திற்கு தீர்வு காண முடியாமல, தெரசா மே பதவி விலகியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். கடந்த 20 வாரங்களாக பிரதமர் பதவியில் இருக்கும் போரிஸ் ஜான்சனையும் இந்த விவகாரம் அலைக்கழித்து வந்தது.

இந்நிலையில், அவர் பெற்றுள்ள மாபெரும் வெற்றியின் மூலம், பிரெக்சிட் விவகாரத்திற்கு சுமூக தீர்வு ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக, லேபர் கட்சி தலைவர் ஜெரமி கார்பின் அறிவித்துள்ளார்.

இதனிடையே, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமோக பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள போரிஸ் ஜான்சனுக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்திய-பிரிட்டன் உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆவலோடு இருப்பதாகவும் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments