5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...!

0 779

சென்னையில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை கீழே இருசக்கர வாகனத்தின் மீது விழுந்து உயிர் தப்பிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. 

விசாகபட்டினத்தை சேர்ந்த மைபால் என்பவர் குடும்பத்தினருடன் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5 வது தளத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் மைபாலின் மனைவி நீலம், ஜினிஷா என்கிற 8 மாத குழந்தையுடன் தங்கியிருந்தனர்.

செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் வீட்டின் ஹாலில் உறவினர்கள் இருந்த போது, படுக்கையறையில் தூங்கிய ஜினிஷா விழித்து, எழுந்து மெல்ல மெல்ல தவழ்ந்து படுக்கையறையை ஒட்டியுள்ள பால்கனிக்கு சென்றது. ஏற்கனவே பால்கனி தடுப்பு, குழந்தைகளுக்கு ஆபத்தாக இருப்பதால் அமைக்கப்பட்டிருந்த வலையின் ஒரு ஓரம் கட்டு தளர்ந்த நிலையில் உள்ளது.

பால்கனிக்கு தவழ்ந்து வந்த குழந்தை ஜினிஷா அதன் வழியாக எட்டிப் பார்த்த போது, அப்படியே 5வது தளத்தில் இருந்து கீழே விழுந்தது. குழந்தை நேரடியாக தரையில் விழாமல் அங்கிருந்த இரு சக்கர வாகனத்தில் இருக்கையில் விழுந்து பின்னர் தரையில் சரிந்தது. இதை கவனித்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஓடிச் சென்று அசைவற்று கிடந்த குழந்தையின் நெஞ்சில் கை வைத்து அழுத்தியவுடன் வீறிட்டு அழுதது. வலியில் துடித்த குழந்தையை அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளருடன் அந்த ஆட்டோ ஓட்டுநர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார்.

குழந்தை எந்த தளத்தில் இருந்து விழுந்தது என்பதை கவனிக்காததால் குழந்தை யாருடையது என தெரியவில்லை. அதற்குள் மருத்துவமனையில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் செல்போனில் தகவல் சொல்லி ஒவ்வொரு வீடாக சென்று விசாரிக்க சொன்னார். அப்போது தான் 5வது தளத்தில் உள்ள வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ள மைபாலின் குழந்தை என்பது தெரியவந்தது. குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை அந்த அலட்சிய பெற்றோருக்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியவில்லை. அதற்கு பிறகு தான் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து குழந்தை சிறிய அளவிலான எலும்பு முறிவுடன் உயிர் தப்பியதை எண்ணி மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றாலும் சம்பவம் குறித்து யானைகவுனி போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத வகையில் இருக்கும் பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். பால்கனியில் சிறிய அளவிலான வழி இருந்தால் கூட அவற்றில் தடுப்புகளை ஏற்படுத்தி,அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments