அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.. அடாவடி சுங்கச்சாவடி ஊழியர்கள்..!

0 893

மூன்று நிமிடங்களுக்கு மேல் வரிசையில் காத்திருக்க நேரிட்டால், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் விதியை மீறி சட்டவிரோதமாக சுங்க கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

2017 ஆம் ஆண்டு லூதியானாவை சேர்ந்த ஹரி ஓம் ஜிண்டால் என்ற வழக்கறிஞர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில் 2 நிமிடம் 50 வினாடிகள் சுங்கச்சாவடியில் காத்திருந்த நிலையில், தன்னிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டது சரியா? என கேள்வி அனுப்பி இருந்த நிலையில், இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய பதில் ஒன்றை தெரிவித்தது.

அதில் சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று குறிப்பிட்டு இருந்தது.

சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளுக்கு தீரா தலைவலியாக மாறிவிடக்கூடாது என்பதற்காக இந்த விதி அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் விதியை மீறி சுங்கக் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகின்றது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆத்தூர், தொழுப்பேடு ஆகிய 2 இடங்களில் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் காலை மாலை வேளையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையான ஒன்று.

3 நிமிடம் காத்திருந்தாலே கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதி இருக்க 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து நத்தை போல ஊர்ந்து செல்லும் வாகனங்களை மறித்து விதியை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருந்து ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்று வாகனங்களில் உரசிக் கொள்வது, சண்டையிட்டுக் கொள்வது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில் பெயருக்குக் கூட சுங்கசாவடியில் போலீசார் எவரும் இல்லை.

அதேபோல 3 கிலோ மீட்டர் தூரம் வரிசை கட்டி வாகன ஓட்டிகள் காத்திருந்த நிலையில், சுங்கக் கட்டணம் இன்றி வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டனர்.

விரைவாகச் செல்ல இயலும் என்ற நம்பிக்கையில், ஃபாஸ்ட் டேக் ஒட்டிய வாகனத்தில் வெளியூர் சென்று திரும்பிய வாகன உரிமையாளர்களும் மணிக் கணக்கில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாயினர்.

எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத இந்த இரு சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களிடம் மாதம்தோறும் கணிசமான தொகையை பெற்றுக் கொள்வதால், சுங்கச்சாவடி ஊழியர்களின் விதி மீறல் குறித்து புகார் அளித்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற விதிமீறல்களை தாமாக முன்வந்து களைய வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அதிகாரிகளோ, சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு கண்ணிருந்தும் குருடர்கள் போல மவுனம் காப்பதாக சரக்கு லாரி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர்.

நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால், சுங்கசாவடி ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் தங்கள் உரிமையை கேட்டுப் பெற வேண்டும் என்றும், சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர் மீது மின்னஞ்சல் வழியாக புகார் அளித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறுகின்றனர்.

புதிதாக அமைந்துள்ள மாவட்ட நிர்வாகமாவது தலையிட்டு, வாகன ஓட்டிகளின் தீராத் துயரமாக மாறியுள்ள இந்த இரு சுங்கசாவடிகளிலும் விதிமீறலை தடுத்து, விரைவாக வாகனங்கள் கடந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து செல்லும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments