ஐயப்பன் வேடம் அணிந்து திருடும் போலி பக்தர் கைது

0 320

சென்னையில் ஐயப்ப பக்தர் வேடம் அணிந்து நூதன முறையில் திருடும் போலி பக்தரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை கே.கே.நகர், அசோக்நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலுள்ள கோயில்களில் நடைபெற்ற இருமுடி கட்டும் நிகழ்வில் தனக்கு தானே மாலை போட்டுக் கொண்டு உலா வந்துள்ளான் 47 வயதான போலி ஐயப்ப பக்தன் செந்தில்குமார்.

கே.கே. நகரிலுள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்தவன், சுற்றும் முற்றும் நீண்ட நேரமாக நோட்டமிட்டுள்ளான். முத்துமாரியப்பன் என்பவருக்கு இருமுடிக் கட்டும் போது அவரது குடும்பத்தினர் தங்களது உடைமைகளை கவனிக்காமல் இருந்ததை பார்த்த செந்தில்குமார், அதிலிருந்த கைப்பை ஒன்றைத் தூக்கி கொண்டு நைசாக நழுவியிருக்கிறான்.

அந்தக் கைப்பையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐ -போன் இருந்ததாகக் கூறப்படுகிறது. கைப்பை திருடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன.

உடனடியாக இந்த திருட்டு குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கைப்பையில் இருந்த செல்போன் சிக்னலை வைத்து செந்தில் குமாரை பின்தொடர்ந்த தனிப்படை போலீசார் நெசப்பக்கம் அருகே ஒரு கடையில் வைத்து அவனை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் கடந்த மாதம் மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மொய் பணம் மற்றும் தங்க நகைகள் திருடியது, நெசப்பாக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் உண்டியலை திருடியது, பாண்டிபஜாரில் செல்போன் திருடியது என பல திருட்டு வழக்குகளில் செந்தில்குமார் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இவை அனைத்துக்கும் மேலாக தனது 3 வது மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் மதுரவாயல் காவல்துறையினரால் செந்தில்குமார் கைது செய்யப்பட்டவன் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். 

திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வரும் நபர்களில் திருடன் யார், நல்லவர்கள் யார் என கண்டறிவது சாத்தியமில்லாதது. எனவே அதுபோன்ற இடங்களில் விலையுயர்ந்த பொருட்களை உரிய பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் போலீசார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments