தெற்காசிய பளுதூக்கும் போட்டி - தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு தங்கப்பதக்கம்

0 354

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்கும் பிரிவில், புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராதா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 110 தங்கம் உள்பட 214 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடித்து வருகிறது. 

13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர்.

நீச்சல் போட்டியில் பேக்ஸ்ட்டோக் (backstroke), ஃபிரீ ஸ்டைல்(freestyle), பிரஸ்ட்ரோக் (breaststroke) என அனைத்து பிரிவிலும் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளினர். 50 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஜெயவீனாவெள்ளிப்பதக்கம் பெற்றார்.

மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் சத்யவார்த் காடியன், சுமித் மாலிக், இந்திய வீராங்கனைகள் குர்ஷன்பிரீத் கவுர், சரிதா மோர் ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர்.

பளுதூக்குதலில் 81 கிலோ பிரிவில் ஸ்ரீஸ்தி சிங், 87 கிலோ பிரிவில் தமிழக வீராங்கனை அனுராதா ஆகியோர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். புதுக்கோட்டை நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த அனுராதா, தஞ்சை தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

சைக்கிள் போட்டியில் இந்தியாவிற்கு 2 தங்கப்பதக்கங்களும், ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ன.

நேற்றைய போட்டியின் முடிவில் 110 தங்கம், 69 வெள்ளி, 35 வெண்கலம் என 214 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. பதக்கப் பட்டியலில் நேபாளம் இரண்டாவது இடத்திலும், இலங்கை மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து:

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ பிரிவு பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை அனுராதாவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், அனுராதாவின் திறமைகள் உலக அரங்கில் மென்மேலும் பெருகி, பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments