சமைக்கவில்லை என்பதால் மனைவி கொலை..! கணவன் கைது...

0 501

சென்னையில் வேலைக்கு செல்லும் தனது மனைவி வீட்டில் சமைக்கவில்லை என்பதற்காக ஆத்திரத்தில் அவரை கழுத்து நெரித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய கணவன் பிரேத பரிசோதனை அறிக்கையால் போலீசாரிடம் சிக்கினான். 

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ஜெயராஜூம், அவரது மனைவி 24 வயதான இலக்கியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இலக்கியா வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 1-ம் தேதி அன்று வீட்டில் ஜெயராஜின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி பார்த்த போது, இலக்கியா தூக்கில் பிணமாக தொங்கினார். தன்னுடன் சண்டை போட்டுக் கொண்டு, தான் உறங்கியதும் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக ஜெயராஜ் கதறி அழுதார். உடலை கைப்பற்றிய கிண்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இலக்கியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தில் காயங்கள் இருப்பதும், கழுத்தை நெரித்தற்கான தடங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த அன்றே ஜெயராஜ் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்ததால், அவரை பிடித்து விசாரித்ததில் முதலில் கதறி கதறி அழுதவர், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையால் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

வணிக வளாகத்தில் காவலாளி வேலை பார்த்த இலக்கியாவிற்கு இரவு 10 மணிக்கு தான் பணி முடியும். அதன் பிறகு வீட்டிற்கு வந்து அசதியில் சமைக்க முடியாமல் பெரும்பாலான நேரங்களில் கணவருக்கும் ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து வைத்து விடுவார் என கூறப்படுகிறது. வீட்டில் ஏன் சமைக்கவில்லை என கேட்டு ஜெயராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று நடந்த சண்டையின் போது ஆத்திரமடைந்த ஜெயராஜ், இலக்கியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாட திட்டமிட்டான். அதன்படி அவரது சேலையால் கழுத்தில் சுருக்கு போட்டு, மின் விசிறியில் மாட்டிவிட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளான் என்கின்றனர் காவல் துறையினர். ஜெயராஜை கைது செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments