தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

0 580

தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய 4  ஏரிகளுக்கு  நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு, வினாடிக்கு 1,923 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், ஏரியில் நீர் இருப்பு 913 மி.கனஅடியாக அதிகரித்துள்ளது. இங்கிருந்து சென்னை குடிநீருக்கு வினடிக்கு 25 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

3,231 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2,925 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் ஏரியில் நீர்இருப்பு ஆயிரத்து 229 மி.கனஅடியாக உயர்ந்துள்ளது.இதில் சென்னை குடிநீருக்கு வினடிக்கு 165 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

3,300 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு, நீர்வரத்து வினாடிக்கு 2,161 கனஅடியாக அதிகரித்துள்ளதால், ஏரியில் நீர்இருப்பு ஆயிரத்து 818 மி.கனஅடியாக உயர்ந்துள்ளது.இங்கிருந்து சென்னை குடிநீருக்கு வினடிக்கு 89 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

1,81 மி.கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 440 கனஅடியாக அதிகரித்து இருப்பதால், ஏரியின் நீர் இருப்பு 131 மி.கனஅடியாக உயர்ந்துள்ளது. இதில் சென்னை குடிநீருக்கு வினடிக்கு 35 கன அடி நீர் அனுப்பப்படுகிறது.

சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக செம்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் செம்பாக்கம், திருமலை நகர் பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

உபரி நீர் செல்வதை மணல் மூட்டைகளை அடுக்கி, பல்லாவரம் பகுதியில் தடுத்ததால், செம்பாக்கம், திருமலை நகர் பகுதியில் புகுந்து அவதிக்குள்ளாகி இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், திருமலை நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியிலும் மணல் மூட்டையை அடுக்கி வைத்ததால், இரு பக்கமும் சரிசமமாக மழைநீர் வெளியேறி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் பெய்த தொடர் மழையால் அங்குள்ள ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் தரைப்பாலம் வழியாக பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments