போத்தீஸ் பொண்ணு பங்களாவில் திருட்டு..!! படுக்கை அறை கேமராவால் சிக்கினான்

0 903

சென்னை போத்தீஸ் ஜவுளிக்கடை உரிமையாளரின் மகள் வசிக்கும் பங்களாவில் காவலாளியாக வேலைபார்த்த வட மாநில கொள்ளையன் ஒருவன், தாலிச் சங்கிலி மற்றும் வைர நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளான். படுக்கை அறையில் ரகசிய காமிரா பொருத்தப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடையின் உரிமையாளர் ரமேஷ் போத்தீ. இவரது மகள் தர்ஷினிக்கும், கட்டுமான நிறுவன அதிபரான சிவா ரெட்டி என்பவருக்கும் திருமணம் முடிந்த கையோடு, கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு, தனது மகள் தர்ஷினி கணவனுடன், தன் அருகிலேயே குடியிருக்க வேண்டும் என்பதற்காக, தனது வீட்டுக்கு அருகில் சென்னை போட்கிளப்பில் உள்ள சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் முரளி என்பவரது பங்களாவின் முதல் தளத்தில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வாடகைக்கு குடி வைத்துள்ளார் ரமேஷ் போத்தீ.

இதனால் தர்ஷினி அவ்வப்போது தனது வீட்டின் முன்பக்க கதவை மட்டும் பூட்டிவிட்டு பக்கத்தில் வசிக்கும் குடும்பத்தினரை காணச் சென்று வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, வெளியில் சென்றிருந்த சமயம், படுக்கை அறை அலமாரியில் இருந்து திருமணத்திற்கு அணிவிக்கப்பட்ட வைர மோதிரம் மாயமாகி இருந்தது.

இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் பணிபுரிந்த பெண் பணியாளர்களை அழைத்து விசாரித்த போது துப்பு துலங்கவில்லை. அதனை தொடர்ந்து 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பணப்பை காணாமல் போனது. அதில் சொற்ப அளவு பணம் இருந்ததால் புகார் அளிக்காமல் தவிர்த்தனர்.

தங்கள் வீட்டின் படுக்கை அறையில் இருந்து அடுத்தடுத்து விலை மதிப்புள்ள பொருட்கள் மாயமானதால் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் தர்ஷினி, படுக்கை அறையில் ரகசிய காமிரா ஒன்றை பொருத்தியுள்ளார்.

இந்த நிலையில் தாலி மாற்றி போடும் சடங்கிற்காக புதிதாக செய்யப்பட்ட 10 சவரன் தாலிச் சங்கிலியை தர்ஷினி, தனது அலமாரியில் கழற்றி வைத்திருந்த நிலையில் அது தீபாவளிக்கு முன்பாக காணவில்லை. இதையடுத்து ரகசிய கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது நகைகள் மாயமான மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது.

பங்களாவின் உரிமையாளரான முரளி ஒடிசாவில் தனது நண்பரின் மென்பொருள் நிறுவனத்தில் காவலாளியாக இருந்த ரஜிப் லிங்கா என்பவனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து காவலாளியாக நியமித்துள்ளார். ரஜீப் லிங்கா தாலிச் சங்கிலியை திருடிச்சென்ற காட்சிகள் படுக்கை அறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய காமிராவில் பதிவாகி இருந்ததால். அவன் தான் கொள்ளையன் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

தீபாவளி விடுமுறைக்காக ஒடிசா சென்றிருந்த ரஜீப் லிங்கா திரும்பியதும் அவனை பொறிவைத்து பிடித்தனர். விசாரணையில் கடந்த 3 வருடமாக அங்கு பணிபுரிந்து வரும் கொள்ளையன் ராஜீப் லிங்கா, முதல் தளத்தில் இருந்து இறங்கி தர்ஷினி வெளியில் செல்லும் நேரத்தை கண்காணித்துள்ளான்.

அவர் சென்றதும் முதல் மாடிக்கு ஏறிச்சென்று அவர்களது ஸ்லைடு ஜன்னல் வழியாக எளிதாக உள்ளே நுழையும் கொள்ளையன், அங்கு பூட்டப்படாமல் சாத்தப்பட்ட நிலையில் இருக்கும் படுக்கை அறைக் கதவை திறந்து அங்கிருந்த வைர மோதிரம், பணப்பை, 10 சவரன் தாலி சங்கிலி ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

தான் திருடியது 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் என்பது தெரியாமல் 12 ஆயிரம் ரூபாய்க்கு ஒடிசாவில் பிளாட்பாரத்தில் கடை நடத்தும் நகைவியாபாரி ஒருவரிடம் விற்றுள்ளான் கொள்ளையன் ரஜீப் லிங்கா என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், அதே போல 10 சவரன் தங்க தாலி சங்கிலியையும் குறைந்த விலைக்கு விற்று செலவழித்துள்ளான். இதனால் அந்த பொருட்களை மீட்க இயலவில்லை என்கின்றனர்

தர்ஷினி வெளியில் செல்லும் போது வீட்டிற்குள் உள்ள கதவுகளை சரியாக பூட்டிவிட்டு சென்று இருந்தால், கொள்ளையன் ரஜீப் லிங்காவால் திருடியிருக்க முடியாது என்றும் வீட்டில் உள்ள நகை, பணம் காணாமல் போன விவரமே சில மாதங்கள் கழித்து தான் தெரிகின்றது என்றால் எந்த அளவுக்கு கவனக்குறைவாக உள்ளனர் என்றும் காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுற்றி காம்பவுண்டு சுவர்கள்..! பாதுகாப்புக்கு காவலாளி..! முன்கதவில் அலாரம்..! என எச்சரிக்கையாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும், காவலாளி நியமனத்தில் அலட்சியமாக இருந்தால் கொள்ளையன் கூட வீட்டுக்கு காவலாளியாகும் விபரீதம் நிகழும் என்பதற்கு போத்தீஸ் உரிமையாளரின் மகள் வீட்டில் நடந்த இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments