மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி.. 3 கட்சிகள் ஆளுநரை சந்திக்க முடிவு..!

மராட்டிய மாநிலத்தில் 3 கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பதவி சிவசேனாவுக்கு என உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மராட்டியத்தில் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், முதலமைச்சர் பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால், பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்க இயலவில்லை. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில்,
40 அம்சங்கள் கொண்ட குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த திட்டத்துடன், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் 19 ஆம் தேதிக்குள் இந்த திட்டம் இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிவசேனாவுக்கு முதலமைச்சர் உட்பட 16 அமைச்சர்கள், தேசியவாத காங்கிரசுக்கு 14 அமைச்சர்கள், காங்கிரசுக்கு 12 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவி என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கு பின்னர் துணை முதல்வர் குறித்த முடிவு எடுக்கப்பட உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மராட்டியத்தில் அரசு அமைப்பதற்கான செயல்முறை தொடங்கி விட்டதாகக் கூறியுள்ளார். தங்கள் அரசு 5 ஆண்டுகளுக்கு முழுமையாக செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு செய்து நேரம் கேட்டுள்ளனர்.
Comments