சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய  10 பேர் கைது

0 428

சென்னை தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக் கடையில் போலி நகை விற்கப்பட்டதாகக் கூறி மோசடி நாடகமாடி, உரிமையாளரிடம் 15 லட்சம் ரூபாய் பறித்து, பிறகு ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய போலி பத்திரிக்கையாளர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். 

திருவேற்காடு சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகரைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைக் கடையில், பழைய தங்க நாணயங்களைக் கொடுத்து கடந்த 3-ஆம் தேதி 3 சவரன் சங்கிலி வாங்கியதாகக் கூறப்படுகிறது. நகையை வாங்கிக் கொண்டு அங்கிருந்த கழிவறைக்குச் சென்ற அவர், திரும்பி வந்து நகையில் முலாம் உதிர்வதாகவும், போலி நகை விற்பதாகவும் கூறி ஊழியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

தாம் ஒரு பத்திரிக்கையாளர் என்றும், ஊடகங்களை அழைத்து, போலி நகை விற்பனையை அம்பலப்படுத்தப் போவதாகவும் தனசேகர் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதை வெளியில் சொல்லக் கூடாது என்றால் 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தனசேகர் கூறவே அவருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் அங்கிருந்து சென்ற அவர், தனது நண்பர்களுடன் மீண்டும் வந்து ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்கவே, அதிர்ச்சி அடைந்த கடை நிர்வாகிகள், மாம்பலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து அந்தக் கடைக்குச் சென்ற தியாகநாயநகர் காவல் துணை ஆணையர் அசோக் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், தனசேகரையும் அவருடன் வந்த 9 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்களின் மோசடி நாடகம் அம்பலமானது. 3 சவரன் நகையை வாங்கிக் கொண்டு கழிவறைக்குச் சென்ற தனசேகர், தாம் வாங்கியது போன்ற ஒரு போலி நகையில் முலாமை நீக்கும் பொடியை தேய்த்து போலி நகை என மோசடி நாடகமாடி பணம் பறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதை அடுத்து தனசேகரையும் அவருடன் வந்த அரசியல் கட்சி பிரமுகர் ஜீவா, வழக்கறிஞர்கள் ஜெகதீசன், அமானுல்லா, ஸ்ரீராம், முருகன், திருமலை உள்பட 10 பேரை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

தனசேகரிடமிருந்து போலியான காவல்துறை அடையாள அட்டையும், 4 ஊடகம் சார்ந்த அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஜீவா என்பவரிடம் இருந்து 2 துப்பாக்கிகளும்,இரண்டு கார்களும் கைப்பற்றப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments