பெண் தகராறில் தொடரும் 4 வது கொடூரக்கொலை ?

0 7346

விருதுநகரில் தாய் கண் எதிரில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. மேலும் பெண் தகராறில் 4 வது நபராக அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த மேற்கு ஒன்றிய அதிமுக மாணவர் அணி அவைத் தலைவரான சண்முகம் என்ற சண்முகவேல் ராஜா. ரியல் எஸ்டேட் தொழிலுடன் இரும்பு கடையும் நடத்திவந்துள்ளார். நேற்று இரவு கடையில் இருந்து வீட்டுக்கு திரும்பிய அவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் முகத்தை கைக்குட்டையால் மூடியபடியும், ஹெல்மெட் அணிந்தபடியும் 6 பேர் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்திற்குள் சண்முகவேலை வீட்டு வாசலில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர்.


சண்முகவேலை மர்மநபர்கள் வெட்டுவதை பார்த்த அவரது தாயார் தடுக்க முற்பட்டார். ஆனால் அவரை தள்ளிவிட்டு சண்முகவேலை சரமாரியாக மர்ம நபர்கள் வெட்டினர். ஆனாலும் கூட விடாத சண்முகவேலின் தாயார் கையில் கிடைத்த பொடி போன்ற ஒன்றை எடுத்து மர்ம நபர்கள் மீது வீசினார். ஆனால் அதற்குள் அனைத்தையும் முடித்துவிட்டு வந்த இருசக்கர வாகனங்களில் ஆறு பேரும் தப்பினர்.


அதிமுக பிரமுகர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டதை அடுத்து விருதுநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே போலீசார் வாகன சோதனை நடத்தியபோது போலீசாரை பார்த்து ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த சதீஷ்குமார், சேர்மராஜ் என்ற இரண்டு பேர் தப்ப முயன்றுள்ளனர். அவர்களை துரத்திச் சென்று பிடித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற முத்துக்காமாட்சி என்பவர் கொலை வழக்கில் சண்முகவேல் முதல் குற்றவாளியாக வழக்கு நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பெண்ணுடனான தகாத உறவால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு முதலில் முத்துக்காமாட்சி கொலைசெய்யப்பட்டுள்ளார். அதன்பின்பு பழிக்கு பழியாக இருதரப்பிலும் சங்கர், அருண்பாண்டியன் ஆகியோர் மாறிமாறி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 4 வது நபராக கொலையுண்ட சண்முகவேல் முத்துக்காமாட்சி வழக்கில் ஜாமீனில் வந்தவர் என்பதால், இதுவும் பழிக்குப் பழியாக நடந்த கொலையா? என பிடிபட்ட இருவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments