கூட்டு பாலியல் வன்கொடுமை - சைக்கோ கும்பல் அட்டூழியம்

0 411

சென்னை விருகம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

சென்னை, விருகம்பாக்கம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்யும் நபர் ஒருவரின் இரண்டாவது மனைவியான 26 வயதான இளம் பெண் தான் இந்த கொடுமைக்குள்ளானவர். கடந்த மாதம் இந்த பெண்ணின் கணவர் தச்சு வேலைக்காக வெளியூர் சென்றுவிட, இந்த பெண்ணும், முதல் மனைவியின் பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் 18- ந் தேதி, அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலில், திருவிழா நடந்துள்ளது.

அப்போது வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம், அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் இருவரும் கோயில் பிரசாதம் எனக் கூறி மயக்க மருந்து கலந்த இனிப்பு பலகாரம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதை வாங்கி சாப்பிட்ட அந்த பெண் சிறிது நேரத்தில் வீட்டிற்கு அருகிலேயே மயங்கி விழுந்துள்ளார். இரவு நேரம் என்பதால் யாரும் கவனிக்காத வேளையில், அந்த பெண்ணை வீட்டிற்குள் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அந்த பெண் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

பின்னர் அந்த வீடியோவை, அந்த பெண்ணின் செல்போனிற்கு அனுப்பி இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர். பறித்து சென்ற தங்க சங்கிலியையாவது திருப்பி கொடுத்து விடும் படி அந்த பெண் மன்றாட, நேரில் வந்தால் தருகிறோம் என வரவழைத்து அந்த பெண்ணை தொடர்ந்து வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போதெல்லாம் மேலும் சில கூட்டாளிகளையும் வரவழைத்து அந்த பெண்ணை மிரட்டி இந்த சைக்கோ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படியே ஒரு மாதம் இந்த பெண்ணை மிரட்டி அம்பத்தூர், நெசப்பாக்கம் என அலைக்கழித்து கொடுமை செய்துள்ளனர். இந்த நிலையில் வெளியூரில் இருந்து திரும்பிய பெண்ணின் கணவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி குறித்து கேட்க, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி அழுதுள்ளார். அந்த வீடியோவையும் தனது கணவரிடம் காண்பித்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, விசாரணை நடத்திய போலீசாரோ, நகைப் பறிப்பு தொடர்பாக மட்டும் விசாரித்து, நகைக்காக 90 ஆயிரம் பணம் கொடுத்து விடும்படி எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.

அந்த நபர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகிலேயே சுற்றிக் கொண்டிருந்துள்ளனர். இதற்கிடையில் அந்த நபர்களின் தொடர் மிரட்டலால் பாதிக்கப்பட்ட பெண் 3 முறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கட்டட்ட குடும்பத்தினர் மனவுளைச்சலுக்கு ஆளாகி, அதற்கு பிறகு தான் கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில் பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, புகாரை அலட்சியப்படுத்திய விருகம்பாக்கம் போலீசார் மீது நடவடிக்கைக்கும் கோரியிருந்தனர். போலீசார் மீது எப்படி புகார் கொடுக்கலாம் என அவற்றை ஏற்க மறுத்து காவல்துறை ஆணையர் அலுவலக போலீசார், வேறு புகார் மனுவை எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதனடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த ஹரீஷ்குமார், ரமேஷ்குமார் உள்ளிட்ட பாலியல் சைக்கோகள் மீது வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், மிரட்டி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல், தாக்குதல், பணம் பறித்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments