மராட்டியத்தில்.... குடியரசுத் தலைவர் ஆட்சி

0 854

மராட்டியத்தில் ஆளுநர் பகத்சிங் கோசியாரி பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

மராட்டியத்தில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை புதிய அரசமைக்க வரும்படி ஆளுநர் பகத் சிங் கோசியாரி முதலில் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் ஆட்சியமைக்க விரும்பவில்லை என அக்கட்சி தெரிவித்துவிட்டது.

இதையடுத்து 2ஆவது பெரிய கட்சி என்ற வகையில் சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த சிவசேனா எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே தலைமையிலான எம்எல்ஏக்கள் தாங்கள் ஆட்சி அமைக்க 2 நாள் அவகாசம் கோரினர். ஆனால் ஆளுநர் அவகாசம் அளிக்க மறுத்து விட்டார்.

பின்னர் மராட்டிய சட்டப்பேரவையில் 3வது பெரிய கட்சியாக உள்ள தேசியவாத காங்கிரசை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அக்கட்சி தங்கள் முடிவை தெரிவிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் கோரியதாக கூறப்படுகிறது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆளுநர் கோஷ்யாரி, மராட்டிய மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதை சுட்டிக்காட்டி அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்

இதனிடையே டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, ஆளுநர் பரிந்துரையை ஏற்று மராட்டியத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்த பரபரப்பான சூழலில் மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்கு தொடுத்துள்ளது. ஆட்சி அமைக்க பாஜகவிற்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுத்த ஆளுநர், சிவசேனாவுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்கார்ஜூன கார்கே உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதன்மூலம், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாஜக கேலிக்கூத்தாக்கி விட்டதாக விமர்சித்தனர்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சோனியா காந்தியை தொலைபேசியில் நேற்று அழைத்து முதல்முறையாக ஆதரவு கேட்டதாகவும், இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். சரத் பவார் கூறியபோது, மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதை தங்களது கட்சி விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். அகமது படேல் கூறியபோது, காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது ஏன் எனக் கேள்வியெழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபடும் என்றார்.

பாஜகவை காட்டிலும் சிவசேனாவுக்கு ஆளுநர் குறைவான அவகாசமே அளித்தார் எனவும், ஆட்சியமைப்பதற்கு முன்பு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவை குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments