பரபரப்பான ஆட்டத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில், சூப்பர் ஓவரில், இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை வீழ்த்தியதைப் போன்று மீண்டும் ஒரு பரபரப்பான நிகழ்வு நடந்துள்ளது.
நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வந்தது. ஏற்கெனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இரு அணிகளும் 2-2 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலை வகித்தன.
இதையடுத்து, 5வது போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக இந்தப் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து 146 ரன்கள் சேர்த்தது, பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 146 ரன்கள் சேர்த்தது.
ஆட்டம் சமநிலையில் முடிந்ததால், இவ்விரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. சூப்பர் ஓவரில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 17 ரன்கள் குவித்தது. 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து, 8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
Comments