இயற்கை விவசாயம்..! 82 வயது மூதாட்டி ஆர்வம்

0 405

கோவையை சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம் அமைத்து கொடுத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய வைத்துள்ளார். இந்த வயதிலும் இயற்கை விவசாயத்தில் ஓசையின்றி சாதனை படைத்து வரும் மூதாட்டி பற்றிய செய்தி...

கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பூங்காநகர் கிராமத்தைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி நஞ்சம்மாள். இயற்கை விவசாய ஆர்வலரான இவர் தனது வீட்டைச்சுற்றிலும் காய்கறி தோட்டம் அமைத்துள்ளதுடன், தனது கிராம மக்களுக்கும் வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம் அமைத்து கொடுத்துள்ளார். அதற்கு தேவையான காய்கறி, கீரை நாற்றுகள் வழங்கி அதன் பராமரிப்பு முறைகளை கற்றுக்கொடுத்து, தேவையான இயற்கை உரங்களையும் இலவசமாகவே தருகிறார், நஞ்சம்மாள்.

எங்கும் ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்தும் நிலையில், இயற்கை விவசாயமும், இயற்கை உரமும் தான் அடுத்த தலைமுறையை காப்பாற்றும் என்று சொல்கிறார். நகர்ப்புறங்களில் இடப்பற்றாக்குறையால் மாடி தோட்டம் போட்டுள்ளார்கள், ஆனால் கிராமத்தில் வீட்டைச்சுற்றி உள்ள நிலத்தை காய்கறி தோட்டங்களாக மாற்றினாலே, இயற்கையாக விளைந்த காய்கறிகளை உண்டு, ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் அவர்...

மூதாட்டி தந்த ஊக்கத்தால், தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே விளைவித்து கொள்வதாகவும், சத்தான நல்ல காய்கறிகள் கிடைப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது போல் ஊருக்கு ஒருவர் இருந்தால், நோயற்ற அடுத்த தலைமுறையை உருவாக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments