பறவைகள் நலனுக்காக...பட்டாசுக் கொண்டாட்டம் இல்லை..!

0 536

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக சரணாலயத்தை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 15 ஆண்டுகாலமாக பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடி  வருகின்றனர். 

வெள்ளோடு பகுதியில் சுமார் 77.185 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பறவைகள் சரணாலத்துக்கு ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வருகை தருகின்றன.

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரையும் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.

இங்கு செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெளிமாநிலங்களில் இருந்தும் சைபீரியா, நியூசிலாந்து, ரஷியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த பறவை இனங்களை காண்டு ரசிக்க ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

பறவைகள் சீசன் இடையில் தீபாவளிப் பண்டிகை வருவதால் இந்த சரணாலயத்தை சுற்றியுள்ள கவுண்டச்சிபாளையம், பூங்கம்பாடி, மேட்டுப்பாளையம், தச்சாங்கரவெளி, செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசுகளை வெடிக்காமல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலையத்திற்கு மழைக்காலங்களில் வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம். இதனால், வேட்டங்குடி, கொள்ளுகுடிபட்டி கிராம மக்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெடி வெடித்து தீபாவளியை கொண்டாடுவதில்லை. மேலும், பெண் கேட்டுச் செல்லும் இடங்களிலும் இதைக் கூறி திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பறவைகள் மீதான இவர்களின் அன்பு குறித்து அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயகாந்தன், அவர்களை நேரில் சென்று பாராட்டி இனிப்புகளை வழங்கினார். முன்னதாக பறவைகள் சரணாலயத்தை அவர் பார்வையிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments