அழகு நிலைய பெண் கொடூர கொலை ஏன் ? குட்டையில் சடலமாக வீச்சு

0 769

நாமக்கல் அருகே அழகு நிலைய பெண் ஊழியர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போர்வெல் லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் மலர்ந்த பொருந்தாக் காதல் கொலையில் முடிந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த இறையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி வனிதா என்கிற சோபனா. இவர் திருச்செங்கோட்டில் உள்ள சுபானா என்ற பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

சோபனாவுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 19ம்தேதி காலை வேலைக்கு புறப்பட்ட இவர், தனது மகன் பிறந்தநாளுக்கு துணிகளை வாங்கிக் கொண்டு வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார்.

ஊருக்கு வரும் கடைசிப் பேருந்தை தவற விட்டு விட்டதால், தனக்குத் தெரிந்த ஒருவருடைய காரில் வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தவர் வீடு திரும்பவில்லை என 20 ந்தேதி காலையில் மொளசி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்செங்கோடு அருகே புள்ளிபாளையம் பகுதியில் உள்ள குட்டையில், அழகு நிலைய ஊழியர் சோபனா சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு காட்டில் சோபனா மகனுக்கு வாங்கிய துணிகள் மற்றும் சாக்லேட்டுகள் இருந்துள்ளன. இவரது கைப்பை விட்டம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த பொருட்களை கைப்பற்றிய போலீசார் ஷோபனா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்தனர். மொளசி காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடப்படவில்லை என்பதால், நகைக்காக கொலை செய்யப்படவில்லை என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டனர்.

பிணக்கூறாய்வில் சோபனா பாலியல் பலாத்காரம் செய்யப் படவில்லை என்பதும், கழுத்தை நெறித்து கொல்லப் பட்டிருப்பதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், சோபனா வேலை பார்த்து வந்த பியூட்டி பார்லர் கட்டிடத்தின் மேல்மாடியில் போர்வெல் அலுவலகம் வைத்துள்ள சுரேஷ் குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரிய வந்தது.

சோபனாவின் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் நடத்திய விசாரனையில், சுரேஷ்குமாருடன் சோபனா பலமுறை பேசி உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷ்குமாரை பிடித்து விசாரித்தபோது ஷோபனா கொலைக்கான மர்மம் விலகியது.

சுரேஷ்குமாருக்கும், சோபனாவுக்கும் கடந்த ஆறுமாதமாக பழக்கம் இருந்து வந்துள்ளது. அப்போது மலர்ந்த காதலால் அவ்வப்போது எல்லைமீறியுள்ளனர். இதே போல சுரேஷ்குமார் மேலும் சில பெண்களிடம் பேசி வந்தது சோபனாவுக்கு தெரியவந்துள்ளது. சுரேஷ்குமாரிடம் இதுகுறித்து கேட்டு அவர் சண்டையிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதி, சுரேஷ்குமார்,சோபனாவை தனது ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு ஊருக்கு வந்துள்ளார். வழியில் வேறு பெண்களுடனான தொடர்பு குறித்து சுரேஷ்குமாரிடம் மீண்டும் கேள்வி எழுப்பிய சோபனா கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கிய சுரேஷ்குமார், சோபனாவை அடிக்க பாய்ந்துள்ளார்.

வெறிகொண்ட சோபனா, சுரேஷ்குமாரின் கழுத்தை பிடித்து நெரித்ததால் மேலும் ஆத்திரம் அடைந்த அவர், சோபனாவின் கழுத்தை நெறித்து கொலை செய்து சடலத்தை அருகில் இருந்த குட்டையில் வீசியதாகவும், துணி மற்றும் பொருட்களை மரவள்ளிக் கிழங்கு காட்டுக்குள் வீசி எறிந்து விட்டு தப்பியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலையாளி சுரேஷ்குமாருக்கு, மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளது குறிப்பிடத் தக்கது.

தவறான உடல்சார்ந்த தேடல் எப்போதும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த கொலை சம்பவமும் ஒரு சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments