போலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா? போலீசாரிடம் வாக்குவாதம்

0 1192

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே, விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் மூன்று பேராக பயணித்த நபர்கள், தலைக்கவசம் அணியாதது குறித்து கேள்வி கேட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் மட்டும் விதிகளை மீறலாமா என்று விதண்டாவாதம் செய்த அவர்களை அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்த நிகழ்வு வலைதளங்களில் பரவி வருகிறது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜவேல், தனது மகன்மற்றும் மகனின் நண்பனை பின்னால் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் தலைக்கவசம் அணியாமல் விதிமீறிச் சென்ற ராஜவேலைத் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜவேலுவின் மகன், தனது செல்போனில் போலீசாரை படம் பிடித்துள்ளார். அவரைக் கண்டித்த காவல் ஆய்வாளர் மதனலோகன்
செல்போனை வாங்கியுள்ளார். அச்சமயத்தில் கள்ளச்சாராயம் விற்ற நபரை கைது செய்து கொண்டு இரு போலீசார், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக சொல்லப்படுகிறது. இதைக் கண்ட ராஜவேலுவின் மகனும், அவரது நண்பரும், போலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் செல்லலாமா என்று கேள்வி கேட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

மழை பெய்யவே அனைவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று அறிவுரை கூறினர். கைது செய்யப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் போலீசார் சென்றது ஏன் என்பது குறித்து காவல் ஆய்வாளர் விளக்கம் அளித்தார்.

விளக்கம் அளித்துக் கொண்டிருந்த போது ஆவேசம் அடைந்த ஆய்வாளர் மதன லோகன், தாங்கள் செத்தாலும் பரவாயில்லை, மக்களின் உயிரைக் காப்பதே தங்கள் நோக்கம் என்று கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

மக்களின் பாதுகாப்பிற்காக அல்லும் பகலும் உழைக்கும் போலீசார் முதல், அனைவரின் உயிருக்கும் பாதுகாப்பு தலைக்கவசம். எனவே, தலைக்கவசம் அணியாமல் விதண்டாவாதம் செய்வதை விடுத்து, நம் உயிர்காக்க நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments