பாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்

0 369

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே முதுகலை பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், “ஒற்றை நாற்று நடவு முறையை” கையிலெடுத்து, பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

விவசாயிகள் சேற்றோடு உழவாடவில்லை என்றால் ஒட்டுமொத்த மனித சமூகமும் சோற்றுக்கு திண்டாடும் நிலை ஏற்படும் என்பதுதான் நிதர்சனம். இருந்தும், ரசாயன உரங்களைக் கொட்டி விளைவிக்கப்பட்ட பயிர்கள், அதிக மகசூலோடு, அதிக நோய்களையும் தரத் தொடங்கின.

இதனால், பாரம்பரிய விவசாயத்தையும் பாரம்பரிய பயிர் ரகங்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் வேட்கையும் விழிப்புணர்வும் இன்றைய தலைமுறையிடம் எழத் தொடங்கியிருக்கிறது. ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த அடுத்த ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிதரன்.

கணினி அறிவியலில் முதுகலை முடித்து, கேரளாவில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் கிளையில் பணியாற்றி வந்துள்ளார். மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறித்தும் “நெல்” ஜெயராமன் குறித்தும் வாசிக்கத் தொடங்கியவருக்கு இயற்கை வேளாண்மை மீதும் பாரம்பரிய நெல் ரகங்கள் மீதும் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வேலையைத் துறந்தவர், இயற்கை விவசாயம் குறித்த ஆழமான தேடலில் இறங்கியிருக்கிறார். இயற்கை விவசாயத்தின் புகழை அமெரிக்கா வரை பரப்பிய தெலுங்கானாவைச் சேர்ந்த நாகரத்தினம் நாயுடுவின் “ஒற்றை நாற்று நடவுமுறை” குறித்து படித்தறிந்து, பயிற்சி பெற்று ஊரிலுள்ள தங்களது இரண்டரை ஏக்கர் நிலத்தில் அதனை செயல்படுத்தியும் வருகிறார் கிரிதரன். பாரம்பரியமான ‘கிச்சிலி சம்பா’ நெல்லை “ஒற்றை நாற்று நடவுமுறை” மூலம் நடவு செய்துள்ள கிரிதரன், நடவுமுறை குறித்து விளக்குகிறார்.

நாற்றாங்காலில் இருந்து இளம் நாற்றுகளைப் பிடுங்கி, அதிலிருக்கும் தாய் மண்ணை தண்ணீரில் அலசி எடுத்துவிட்டு, பிறகு உழவு நிலத்தில் வைத்து அழுத்தி நடுவதால், இளம் நாற்று கிட்டத்தட்ட இறந்து மீண்டும் பிறப்பதாகக் கூறுகிறார் கிரிதரன். அவ்வாறின்றி தாய் மண்ணோடு சேர்த்து அந்த இளம் நாற்றுகளை அப்படியே எடுத்து உழவு நிலத்தில் வைக்கும்போது, அதன் உயிர் அறுபடாது விரைவாக வளரும் என்கிறார் அவர்.

புதிதாக இந்த “ஒற்றை நாற்று நடவு முறைக்குள்” உள் நுழையும் விவசாயத் தொழிலாளர்களுக்கு பொறுமையாக விளக்குகிறார் கிரிதரன்.

கிரிதரன் போன்ற மெத்தப் படித்த இளைஞர்கள் இயற்கை விவசாயத்துக்குள் அடியெடுத்து வைப்பது, எதிர்கால இந்தியாவை ஒரு புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments