ஸ்பைஸ் ஜெட் விமானத்தை இடைமறித்த பாகிஸ்தான் விமானப்படை

0 576

டெல்லியிலிருந்து, ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூல் நகருக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தை, பாகிஸ்தான் விமானப்படை போர்விமானங்கள், கடந்தமாதம் திடீரென இடைமறித்திருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று, தலைநகர் டெல்லியிலிருந்து, 120 பயணிகளுடன், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகருக்கு, SG-21 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் பயணமானது. பாகிஸ்தான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு பறந்து வந்து இடைமறித்த பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டு F-16 ரக போர் விமானங்கள், ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் பறக்கும் உயரத்தை குறைக்குமாறு விமானிகளிடம் கூறியதோடு, விமானம் குறித்த தகவல்களை தருமாறு கூறியிருக்கின்றனர்.

இது ஸ்பைஸ் ஜெட் விமானம் என்றும், இந்தியாவிலிருந்து, ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பயணிகள் விமானம் என்றும், திட்டமிடப்பட்ட நேரத்தில், காபூல் நகருக்குச் விமானம் பறந்து கொண்டிருப்பதாகவும், ஸ்பைஸ் ஜெட் விமானிகள் விளக்கம் அளித்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்றபோது, பாகிஸ்தான் போர் விமானங்களை, ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சென்ற பயணிகளால், நன்றாக காண முடிந்துள்ளது. ஒவ்வொரு விமானத்திற்கும், பன்னாட்டு சேவையின்போது, ஒரு பொது குறியீடு வழங்கப்படும். அந்த வகையில், ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கு SG என்று வழங்கப்பட்டிருந்த குறியீட்டை, இந்திய விமானப்படை விமானங்களுக்கான "IA" என்ற குறியீடாக, பாகிஸ்தான் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் தவறாக புரிந்துகொண்டு ஏற்பட்ட குழப்பத்தால் இத்தகைய இடைமறிப்பு சம்பவம் நடைபெற்றதாக, தகவல்கள் கூறுகின்றன.

மேலும், ஸ்பைஸ் ஜெட் விமானம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் செல்லும் வரை, அந்த விமானத்தோடு, பாகிஸ்தான் விமானப்படை போர் விமானங்கள், இணைந்தே பறந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்திருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments