சிறுமிக்கு டெங்கு - பள்ளிக்கு அபராதம்

0 318

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே டெங்குக் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் புகார் கூறி வரும் நிலையில், அச்சிறுமி படித்த தனியார் பள்ளியில் டெங்குக் கொசுக்கள் உற்பத்திக்கான சூழல் கண்டறியப்பட்டதால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரின் 4 வயது மகள் நட்சத்திரா, பள்ளிகொண்டாவில் உள்ள சிக்சா கேந்திரா மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்படவே உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று முன் தினம் இரவு நட்சத்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருப்பினும் வைரஸ் காய்ச்சல் என்றே சான்று அளித்ததாகவும், டெங்கு என வாய்மொழியாக மட்டுமே கூறியதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், சிறுமி நட்சத்திரா படித்த சிக்சா கேந்திரா பள்ளியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளி வளாகத்தில், டெங்கு கொசு உற்பத்தி ஆகும் நிலையில் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் தட்டுகள் ஆகியவை கிடப்பது கண்டறியப்பட்டது.

கட்டிடத்தின் அனைத்து மேற்பகுதிகளிலும் லார்வாக்கள், மற்றும் டெங்குக் கொசுக்கள் உருவாகும் ஆரம்ப நிலை மற்றும் தொடர் நிலை இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதை அடுத்து, அந்தப் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பள்ளியில் பயிலும் குழந்தைகளின் நலன் கருதி எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராத தொகையை 24 மணி நேரத்திற்குள் செலுத்துவதுடன் அதே காலக்கெடுவுக்குள் பள்ளி வளாகத்தை முழுமையாக சுத்தம் செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற தொடக்கக் கல்விக்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள், குழந்தைகளின் நலன் மீதும் அக்கறை காட்ட வேண்டிய தருணம் இது என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இதனிடையே நட்சத்திரா வசித்த அம்பேத்கர் நகரில் டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு வேலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உத்தரவிட்டார்.  இதை அடுத்து 36 பேர் கொண்ட குழு, டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

3 வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் கண்டுபிடிக்கப்பட்டு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளை தூய்மையாகவும், கொசு உற்பத்தியாகாத வகையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments