தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

0 920

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது. இன்று அதிகாலையிலும் சாரல் மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோன்று தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று காலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல்,திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 15 நாட்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. தற்போது சம்பா நடவு பணி நடைப்பெற்று வரும்நிலையில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, கோவிலாங்குளம், காந்திநகர், கல்லூரணி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டாரத்தில் குளிர்ந்த காற்றுடன் இதமான வானிலை நிலவி வருகிறது.

காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று காலையில் கனமழை பெய்து சூழலை குளிர்ச்சியாக்கியது. சூடாமணிபுரம், அரியக்குடி, செஞ்சை, கழனிவாசல், மாத்தூர், இலுப்பகுடி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவில் இருந்து பலத்த மழை பெய்தது. பேராவூர், பட்டினம்காத்தான், அச்சுந்தன் வயல், சத்திரக்குடி, கீழக்கரை, சிக்கல், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments