வெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்

0 472

குவைத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சென்னை அம்பத்தூரை சேர்ந்த பெண், தமிழக காவல்துறையினரின் உதவியால் மீட்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக வெளிநாடு சென்று வீட்டு வேலை செய்ய முடிவெடுத்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏஜென்ட் செந்தமிழ் என்பவர் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா பெற்று கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி கிருஷ்ணவேணி குவைத் சென்றுள்ளார்.

6 மணி நேரம் தான் வேலை, 4 மாதத்தில் 1 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என ஏஜெண்ட் கூறியதை நம்பி சென்ற அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஹவால்லி (Hawalli) பகுதியில் 18 மணி நேரம் வேலை பார்க்க வைத்து, உணவாக அரேபிய ரொட்டியை மட்டுமே வழங்கியுள்ளனர். ஒரு மாதத்தில் உடல் நலம் குன்றியதால் சொந்த ஊருக்கு திரும்ப எண்ணிய கிருஷ்ணவேணியின் செல்போனை பறித்துக் கொண்டு அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி இருக்கின்றனர்.

தனது இக்கட்டான நிலை குறித்து கணவர் கிருஷ்ணமூர்த்திக்கு மற்றொருவரின் செல்போன் மூலம் தகவல் அளித்ததை அடுத்து, தனியார் தொண்டு நிறுவனரான கன்யா தேவியிடம் கிருஷ்ணமூர்த்தி உதவி கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணவேணி குவைத்தில் இருந்து பேசியதை வீடியோவாக பதிவு செய்து, திருவண்ணாமலை எஸ்.பி. சிபி சக்கரவர்த்திக்கு கன்யா தேவி அனுப்பி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து எஸ்.பி.சிபி சக்ரவர்த்தி உத்தரவின்பேரில் நடைபெற்ற விசாரணையில் கிருஷ்ணவேணியை குவைத் அனுப்பி வைத்ததாக ஒப்புக்கொண்ட செந்தமிழ், அவர் விரைவில் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்வதாக காவல்துறையினரிடம் வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் புகார் அளித்த 8 நாள்களில் கடந்த 10 ஆம் தேதி கிருஷ்ணவேணி சென்னை திரும்பினார்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணவேணி, தான் சந்தித்த கொடுமைகளை கண்ணீருடன் விளக்கினார். மேலும் வீட்டு வேலைக்காக வெளிநாட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் வேதனையுடன் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய தனியார் தொண்டு நிறுவனர் கன்யா தேவி, போலி விசா மூலம் துபாய் வழியே கிருஷ்ணவேணி குவைத் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இது போன்றே ஏஜெண்டுகள் பலர் ஒரு நெட்வொர்க் அமைத்து சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

கிருஷ்ணவேணியை குவைத்திற்கு அனுப்பிய ஏஜெண்ட் செந்தமிழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடு சென்று சிக்கிக்கொண்டவர்களை மீட்க Protector of Emigrants என்ற அரசு அலுவலகம் சென்னை அண்ணாசாலை மற்றும் அசோக்நகரில் செயல்பட்டு வருவதை மக்கள் அறிந்துகொள்ள விழிப்புணர்வு தேவை என்றும் கன்யா தேவி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments