கோவையில் 30 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள்

0 369

கோவை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களிடமிருந்து 30 லட்ச ரூபாய்  பணம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்... 

கோவை ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்த தர்ஷன் அசோக் என்பவர், திருப்பூரில் நிதி நிறுவனம் ஒன்றில் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். தனது நண்பரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராகுல் என்பவருடன் திருப்பூர் சென்று பணத்தை பெற்றுக் கொண்ட தர்ஷன், இரு சக்கர வாகனத்தில் கோவை திரும்பிக் கொண்டிருந்தார்.

இருவரும் கருமத்தம்பட்டி அருகே கனியூர் சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதியதில் இரண்டு வாகனங்களில் இருந்த 4 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அப்போது பின்னால் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் தர்ஷனிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றுள்ளனர். அவர் தர மறுக்கவே அவரது முதுகில் கத்தியால் குத்திய மர்ம நபர்கள் பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து காயமடைந்த தர்ஷன் அசோக், எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த சிவராஜ், தமிழரசன் ஆகியோர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த ராகுல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தர்ஷன் அசோக் தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் பத்திரத்தை எடுத்து வந்ததும், திருப்பூரிலுள்ள நிதி நிறுவனத்தில் முறையாக அடமானம் வைக்காமல் பத்திரத்தை கொடுத்து வாய்மொழி ஒப்பந்தத்தின் பேரில் கடன் பெற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கருமத்தம்ப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது தற்செயலானதா, அல்லது திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், அதில் வந்த சிவராஜ் மற்றும் தமிழரசனுக்கு கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மருத்துவமனையில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தர்ஷன் கடன் பெற்று வந்ததை அறிந்த நிதி நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொள்ளையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் திருப்பூரில் உள்ள நிதி நிறுவனத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments