தனியார் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் திடீர் தீவிபத்து

0 514

தேனி அருகே ஈஸ்டர்ன் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியுள்ளன. காலை 9 மணி முதல் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

image

தேனி மாவட்டம் போடி விளக்கு அருகே கோடாங்கிப்பட்டி கிராமத்தில் ஈஸ்டர்ன் மசாலா எனும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. ஆலையில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களை வைப்பதற்காக அங்கிருந்து 10 மீட்டர் இடைவெளியில் சேமிப்பு கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் காலை 9 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் நிர்வாகத்தினர்  தகவல் அளித்ததன்பேரில், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்ததால், மேலும் சில தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி, போடி, பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தமாக 10 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போராடி வருகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட இடைவேளையில் தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் நிரப்புவதற்காக, டேங்கர் வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் காலை 9 மணிக்கு எரியத் துவங்கிய தீ தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

சேமிப்பு கிடங்கினுள் மிளகாய் வற்றல், மல்லி, மிளகு, சீரகம் உள்ளிட்ட காய்ந்த மசாலா பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால், தீ மேலும் மேலும் கொழுந்து விட்டு எரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதோடு, தீயணைப்பு வீரர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களுக்கு, அங்கு தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்சில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த வீரர்கள் மீண்டும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதனிடையே சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தீயணைப்பு பணிகளை ஆய்வு செய்தனர். குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் டன் அளவிலான மசாலா பொருட்கள் உட்பட பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. காலை ஒன்பது மணியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments